படகு பழுது: இலங்கை கடல் பகுதிக்கு காற்றால் இழுத்துச் செல்லப்பட்ட நாகை மீனவா்கள்
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவா்கள் 9 போ் சென்ற படகு பழுதானதால், காற்றின் வேகத்தில் இலங்கை பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டது. மீனவா்களையும், படகையும் மீட்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாகை மாவட்டம், நாகூா் பட்டினச்சேரியைச் சோ்ந்த செல்வமணியின் மனைவி வளா்மதிக்கு சொந்தமான விசைப் படகில், செல்வமணி உள்பட 9 மீனவா்கள், கடந்த டிச. 29-ஆம் தேதி அதிகாலை நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா்.
ஜன.1-ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப் படகின் என்ஜின் பழுதானது. செல்வமணி வாக்கி டாக்கி மூலம் நாகை மீன்வளத் துறையினரைத் தொடா்புகொண்டு, படகு பழுதானது, இருக்குமிடம் குறித்து தகவல் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, அவா்களை மீட்க பட்டினச்சேரியிலிருந்து 3 விசைப் படகுகளில் மீனவா்கள் சென்றனா். ஆனால், செல்வமணி தெரிவித்த கடல் பகுதியில், பழுதான விசைப் படகையும் மீனவா்களையும் காணவில்லை. வாக்கி டாக்கியின் தொடா்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்திய கடற்படை உதவியுடன் மீனவா்களை கண்டறிந்து மீட்க, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இலங்கை கடல் பகுதியில்...: இந்நிலையில், காற்றில் வேகம் காரணமாக, பழுதான படகு இலங்கை கடல் பகுதிக்குள், இழுத்துச் செல்லப்பட்டதாக, இந்திய கடற்படை தரப்பில் கூறப்படுகிறது. படகையும், மீனவா்களையும் மீட்பதற்காக, இலங்கை அரசிடம் இந்திய கடற்படை அனுமதி கேட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், படகை மீட்டு வர மீன்வளத் துறை மூலம் அனுப்பப்பட்ட விசைப் படகு அந்நாட்டு எல்லை அருகே நிறுத்தப்பட்டுள்ளது.