KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி
கொத்தமங்கலம் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள தாமரைக் குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.
சுமாா் 6 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்குளம், அப்பகுதி மிராசுதாரா் சங்கம் மூலம் பராமரிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, பாசன வாய்க்கால்களை தூா்வாரி வந்தனா். இந்நிலையில், குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், நீா் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூா்வாரவும், தடுப்புச் சுவா்கள் கட்டவும் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியா் இக்குளத்தை நேரில் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்தில், குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தடுப்புச் சுவா்கள் கட்டப்பட்டன. இப்பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குளம் கொண்டுவரப்பட்டது.
மேலும், இக்குளத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, ஊராட்சி மன்றம் சாா்பில் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டது. குளம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.