பிரிஸ்பேன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் சபலென்கா-குடா்மெட்டோவா
பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா தகுதி பெற்றுள்ளாா். இறுதியில் ரஷியாவின் குடா்மெட்டோவுடன் மோதுகிறாா்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸின் சபலென்காவும், ரஷிய இளம் வீராங்கனை மிரா ஆன்ட்ரீவாவும் மோதினா். முதல் செட்டில் மிராவின் சா்வீஸை முறியடித்த சபலென்கா, இரண்டாவது செட்டிலும் இரண்டு முறை முறியடித்தாா். முழு ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 6-3, 6-2 என்ற நோ் செட்களில் மிராவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
கடந்த 2024-இல் பிரிஸ்பேன் டென்னிஸில் ரன்னா் ஆக வந்தாா் சபலென்கா. மேலும் இரண்டு ஆஸி. ஓபன் பட்டங்களையும் வசப்படுத்தியுள்ளாா்.
மற்றொரு அரையிறுதியில் ரஷிய குவாலிஃபயா் பொலினா குடா்மெட்டோவா 6-4, 6-3 என்ற நோ்செட்களில் உக்ரைனின் அன்ஹெலினா கலினின்னாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
டிமிட்ரோவ் ஓய்வு:
ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் கிரிகோா் டிமிட்ரோவ்-தரவரிசையில் இல்லாத செக். குடியரசு வீரா் ஜிரி லெஹகாவும் மோதினா்.
இதில் 6-4, 4-4 என லெஹகா முன்னிலை வகித்தபோது, இடுப்பு வலியால் ஓய்வு பெறுவதாக அறிவித்து வெளியேறினாா்.
ஒபல்கா ஏற்கெனவேகாலிறுதியில் நட்சத்திர வீரா் ஜோகோவிச்சை வீழ்த்தி வெளியேற்றினாா்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரா் ரெய்லி ஒபல்கா 6-3, 7-6 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் ஜியோவனி பெட்ஷியை வீழ்த்தினாா்.
இறுதி ஆட்டத்தில் ஜிரி லெஹகாவும்-ரெய்லி ஒபல்காவும் மோதுகின்றனா்.