இத்தாலி பிரதமர் உடனான மீம்ஸ்... பிரதமர் மோடி சொன்னதென்ன?
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய 'People by WTF' தொடரில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்ற நாடுகளின் உணவுகள் குறித்துப் பேசும்போது, ``எனக்குப் பிடித்த உணவு பீட்சா. இது இத்தாலியிலிருந்து பிரபலமானது. இத்தாலியைப் பற்றி உங்களுக்கு நிறைய தெரியும் என்று மக்கள் அடிக்கடிக் கூறுவார்கள். அதைப் பற்றி ஏதாவது பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா? இத்தாலிப் பிரதமருடன் உங்கள் மீம்ஸ்களைப் பார்த்திருக்கிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார் நிகில் காமத்.
அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ``மீம்ஸ்கள் எப்போதும் வந்துக்கொண்டேதான் இருக்கும்... மீம்ஸ்கள், சமூகவலைதள விவாதங்களில் நான் கவனம் செலுத்துவதில்லை. நான் உணவுப் பிரியர் அல்ல... ஆனாலும் நான் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்குப் பரிமாறப்படும் உணவுகளை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவேன். யாராவது எனக்கு ஒரு மெனு கொடுத்தால், என்ன சாப்பிட வேண்டும் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாமல் திணறுவேன். நான் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தபோது மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவும் என் முன் உள்ள உணவும் ஒன்றா என்று கூட எனக்குத் தெரியாது. அதனால், அப்போதெல்லாம் மறைந்த அருண் ஜெட்லியிடம்தான் உணவை ஆர்டர் செய்யக் கூறுவேன்." எனப் பகிர்ந்துகொண்டார்.