ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்
டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைமை அலுவலகம்... ஜன.15-ம் தேதி திறப்பு!
1930ம் ஆண்டு துவங்கிய பயணம்..
சுதந்திரப்போராட்ட காலத்திலும் சரி, சுதந்திரத்திற்கு பிறகும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் நிரந்தமாக இருந்ததில்லை. அதன் அலுவலகம் டெல்லியில் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. வரும் டிசம்பர் மாதம் 140-வது ஆண்டை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி கடந்த 1930ம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு கட்டிய ஆனந்த் பவனில் தனது பயணத்தை தொடங்கியது.
பிரிவினையின் போது பேச்சுவார்த்தை நடந்த இடம்..
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1947-ம் ஆண்டு காங்கிரஸ் அலுவலகம் உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்தது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திர் சாலையில் உள்ள அலுவலகத்தில் கட்சி செயல்படத்தொடங்கியது. நாடு பிரிவினை தொடர்பாக இந்த அலுவலகத்தில்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஜந்தர் மந்தர் அலுவலகம்
1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் முதல் பிரிவினை ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் ஜந்தர் மந்தர் அலுவலகம் நிஜலிங்கப்பா தலைமையிலான அணிக்கு சென்றுவிட்டது. இதனால் இந்திரா காந்தி தலைமையிலான அணியின் அலுவலகம் ராஜேந்திர பிரசாத் சாலைக்கு சென்றது. அதன் பிறகு 1977ம் ஆண்டு நிஜலிங்கப்பா அணி ஜனதா கட்சியுடன் சேர்ந்தது. இதனால் ஜந்தர் மந்திர் அலுவலகம் ஜனதா கட்சியின் அலுவலகமாகவும் மாறியது. அதன் பிறகு ஜனதா கட்சியில் பல முறை பிளவு ஏற்பட்டது. இறுதியாக 1993ம் ஆண்டு அரசின் உத்தரவை தொடர்ந்து அந்த அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.
அக்பர் சாலைக்கு மாற்றம்..
1978ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவைச் சந்தித்தது. இதையடுத்து இந்திரா காந்தி தலைமையிலான அணி தற்போது காங்கிரஸ் அலுவலகம் இருக்கும் அக்பர் சாலைக்கு வந்தது.
1978-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிரிந்தபோது இந்திரா காந்தி தலைமையிலான அணியை உண்மையான காங்கிரஸ் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த அணி கடந்த 1985ம் ஆண்டு சரத்பவார் தலைமையில் நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதோடு, அதன் அலுவலகத்தையும் காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைத்தது. அந்த அலுவலகத்தையும் காங்கிரஸ் கட்சி 1991-ம் ஆண்டு வரை பயன்படுத்தி வந்தது.
கட்சிகளுக்கு அரசு வழங்கிய நிலம்
இறுதியாக கட்சிகள் அலுவலகம் கட்டிக்கொள்ள அரசு தீன் தயாள் உபாத்யா சாலையில் கட்சிகளுக்கு நிலம் ஒதுக்கியது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஏக்கர் நிலம் கிடைத்தது. அந்த இடத்தில் காங்கிரஸ் கட்சி தனக்கான புதிய அலுவலகத்தை கட்டும் பணியை 2009ம் ஆண்டு தொடங்கியது. கட்சியின் 125வது ஆண்டில் இந்த பணியை சோனியா காந்தி தொடங்கி வைத்தார். இந்திரா பவன் என்று பெயரிடப்பட்டுள்ள கட்சியின் நிரந்தர தலைமை அலுவலகம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடந்து வந்தது.
இதே சாலையில் நிலம் வாங்கிய பா.ஜ.க தனது தலைமை அலுவலகத்தை 2016-ம் ஆண்டு கட்டத்தொடங்கியது. ஆனால் 2018ம் ஆண்டே அதனை கட்டி முடித்து திறந்துவிட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்காக கட்டப்படும் தலைமை அலுவலகம் ஜன சங்க் நிறுவனர் தீன் தயாள் உபாத்யா சாலையில் வருவதால் காங்கிரஸ் கட்சி அந்த சாலையை பயன்படுத்தால் பின்புறம் இருக்கும் கோட்லா மார்க் சாலையை பயன்படுத்தி வருகிறது.
ஜன.15-ம் தேதி திறப்பு!
இதற்காக பின்புறம் வாசல் திறக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருந்ததால் காங்கிரஸ் அலுவலக கட்டுமான பணி மெதுவாக நடந்து வந்த நிலையில் தற்போதுதான் முடிந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் துவக்க நாளான கடந்த 28-ம் தேதியே கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க திட்டமிட்டனர். ஆனால் மன்மோகன் சிங் இறந்ததை தொடர்ந்து தற்காலிகமாக இது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வரும் 15ம் தேதி சோனியா காந்தி கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.