BB Tamil 8 Day 96 : `கண்ணனைத் தேடும் பவித்ரா; மனம் புண்பட்ட வர்ஷினி’ - சவுந்தர்ய...
`90 மணிநேர வேலை கேட்பவர்கள் வரிச்சலுகை வேண்டாம் என்பார்களா?’- இதுவும் நாட்டின் பொருளாதாரம்தானே பாஸ்?
ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் பெற்ற உரிமை!
உலகின் பல நாடுகளில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தொழிலாளர்கள் கட்டாய வேலை செய்யும் கொடுமைக்கு தள்ளப்பட்டதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. அந்தப் போராட்டங்கள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியும் உயிர்த் தியாகம் செய்தும் வந்ததுதான் 8 மணி நேர வேலை. அப்படி உயிர்த் தியாகங்கள் செய்து பெற்ற ‘8 மணி நேரம் வேலை.. 8 மணி நேரம் ஓய்வு.. 8 மணி நேரம் உறக்கம்’ என்ற தொழிலாளர்களின் உரிமையைப் பறிப்பதற்கான சதிவேலை தற்போது நடந்துகொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் இப்போது வலுத்து வருகிறது.
'ஊதியம் வேண்டுமா...ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலைப் பாருங்கள்' இது இப்போது அல்ல...இந்தக் குரல் 18-ம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் எழுந்துவிட்டது. வேலை பார்த்து...பார்த்து ஓய்ந்து; முதலாளி மட்டும் வளர்ந்து தொழிலாளர்கள் தேய்ந்து, முதலாளிகளை எதிர்த்து குரல் கொடுக்க தெம்புக்கூட இல்லாத காலம் அது. ஆனால், இந்தத் தெம்பு இல்லாத நிலையிலும், நாட்டில் அங்குங்கு புரட்சி குரல்கள் வெடித்தன. அப்படி வெடித்த குரல்களில் தெற்கே வ.உ.சி குரலும், வடக்கே அம்பேத்கரின் குரலும் ஒன்று. இதன் விளைவாகத் தான், நாடு விடுதலை அடைந்த அடுத்த ஆண்டே அதாவது 1948-ம் ஆண்டே, தொழிலாளர்கள் சட்டம் இயற்றப்பட்டது. அதில், ஒருவர் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டும் தான் வேலை பார்க்க வேண்டும் என்று கூறப்பட்டு, செயல்பாட்டில் இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது.
'காலங்கள் மாறினாலும்; காட்சிகள் மாறாது' என்பதுப்போல இந்த 21-ம் நூற்றாண்டிலும் அதிக மணிநேரம் வேலை பார்க்க வேண்டும் என்கிற குரல்கள் வரிசையாக இப்போது எழுகிறது. ஆனால், அது கொஞ்சம் மாற்றி 12 மணிநேரத்தை தாண்டி,13 மணிநேரமாக இருப்பது இன்னும் பெரிய அதிர்ச்சி ரகம்.
முதலில், இன்போசிஸ் நாராயண மூர்த்தி. இப்போது, எல் அண்ட் டி தலைவர் எஸ்.என் சுப்பிரமணியம். நாராயண மூர்த்தியாவது கொஞ்சம் கருணை பார்த்து வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை என்றார். ஆனால், சுப்பிரமணியத்திற்கு கருணையில் 'க' கூட தெரியாது போலும். அவர் எடுத்த உடனேயே 90 மணிநேர வேலைக்கு எகிறிவிட்டார்.
L&T சொல்லும் விளக்கம்...!
L&T நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில், ``L&T நிறுவனம் தேசத்தை காட்டி எழுப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் உள்கட்டமைப்பு தொழில்கள் தொழில்நுட்ப திறன்களை வடிவமைத்து வருகிறது. இந்தியாவை முன்னேற்றம் அடைந்த வளர்ந்த நாடாக மாறுவதற்கு, எங்கள் பார்வையை உணரவும் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சி தேவை என்பதை தான் எங்கள் தலைவர் கூறியுள்ளார். எங்கள் நிறுவன தலைவரின் கருத்துக்கள் பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அசாதாரண விளைவுகளுக்கு அசாதாரண முயற்சி தேவை என்பதை வலியுறுத்தும் வகையில் தான் அவ்வாறு கூறினார்.” என்றிருக்கிறார்.
`இது லாப வெறியின் உச்சம்’ என கொதிக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ்..
`'நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்க்கிறேன்' என்று கூறியுள்ள எஸ்.என் சுப்பிரமணியம், 'நீங்களும் ஞாயிற்றுக்கிழமை வேலை பாருங்கள்' என்று கூறியிருக்கிறார். உயிருடன் இருக்க மட்டுமல்ல... வாழ்வதற்காகவும் தான் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள். நாட்டின் முன்னேற்றம் என்பது வெறும் ஜி.டி.பி வளர்ச்சி மட்டுமல்ல... மக்களின் முன்னேற்றமும் தான். 90 மணிநேரம் வேலை என்றால் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 13 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அப்போது வீடு, குடும்பம் என்ன ஆகும்; பெண்களால் வேலைக்கு செல்ல முடியுமா?
அவரின் கருத்து சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் இந்திய தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிரானது. 1908-ம் ஆண்டு வ.உ.சி, '12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்' என்று சட்டம் போட்ட பிரிட்டிஷாருக்கு எதிராக குரல் கொடுத்தார். பிரிட்டிஷாருக்கு எதிராகவே குரல் கொடுத்த இந்த நாட்டில், இப்போது இந்த பேச்சுகள் உலா வருகின்றன.
'வேலையின்மை அதிகம் இருக்கிறது', 'ஓய்வுக்காலம் நீட்டிக்கப்படுகிறது' - இப்படி இருக்கும் ஒரு நாட்டில் 90 மணிநேரம் வேலை ஒருவருக்கே தேவையா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் இளைஞர்களை உள்ளடக்காத நாட்டின் வளர்ச்சியாக இருக்கும். இது லாப வெறியின் உச்சம்.
அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை நேரம். வேலை நேரத்தை உயர்த்துவதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியாது. காரணம், ஒருவர் முதல் மணிநேரத்தில் வேலை பார்ப்பதற்கும், எட்டாவது மணிநேரத்தில் வேலை பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலை எடுத்துகொள்வோம். அவர்கள் 13 மணிநேரம் மூட்டை தூக்க முடியுமா?
கடந்த ஆண்டு, தமிழ்நாடு அரசு தொழிலாளர்கள் வேலை நேரம் சம்பந்தமாக ஒரு சட்டத்தை கொண்டுவந்தது. அதில், 'ஒரு வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்பதில் மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். ஆனால், ஒரு நாளுக்கு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்வதற்கு பதிலாக, அதை உயர்த்தி, இன்னுமொரு நாளை விடுமுறை நாளாக மாற்றலாம்' என்று கூறியதையே நாம், 'இது வேலை பளுவை தரும்' என்று ஒப்புக்கொள்ளவில்லை.
பளு என்பதை தாண்டி உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னையாகக் கூட மாறலாம். ஒருத்தர் எப்போதும் மண்வெட்டியையும், ஸ்பேனரையும் வைத்துகொண்டு இருந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், 'லேப்டாப்பும் கையுமாகவே சுத்துகிறான்' என்பது நவீனம் ஆகிவிட்டது.
எஸ்.என் சுப்பிரமணியம், நாராயண மூர்த்தி ஆகியோரின் கூற்று எளிமைப்படுத்தி கூறவேண்டுமானால், அவர்கள் 'மீண்டும் அடிமை முறைக்கு செல்ல வேண்டும்' என்று கூறுகிறார்கள். இப்படி கூறுபவர்கள் தேசத்தின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் மிக முக்கியமாக கருதினால், 'எங்களுக்கு வரி குறைப்பு வேண்டாம். நாங்கள் 50 சதவிகிதம் வரி கட்டுகிறோம்' என்று கூறலாம் தானே. அதுவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக உதவிகரமாக இருக்கும்.
90 மணி நேர வேலை சமூக வாழ்க்கையை பாதிக்கும்... குடும்பத்தை பாதிக்கும். ஒருவேளை, அவர்களுக்கு வயதான பெற்றோர்களோ, குழந்தைகளோ இருந்தால் அவர்களை பார்த்துகொள்ள ஒரு ஆளை நியமிப்பார்கள். அவர்களின் வேலை நேரமும் 13 மணி நேரமாக மாறும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சமூகமே மாறும். ஆக, இதை மனிதநேயம் அல்லாத காட்டுமிராண்டி தனம் என்று எடுத்துகொள்ளலாம். டெலிவரி போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் எப்படி நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார்களோ, அப்படி எல்லாரும் உழைக்க வேண்டும் என்பது தான் எஸ்.என் சுப்பிரமணியன், நாராயண மூர்த்தி கூற்றின் சாராம்சம்.
இது முதலாளிகளுடைய நாடு அல்ல... ஒவ்வொரு இந்தியனுடைய நாடு. 1948-ம் ஆண்டே தொழிற்சட்டம் வந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் 90 மணிநேரம் பேச்சு கேலிகூத்தாக உள்ளது.
'காலையில் சில மணி நேரம் வேலை... மாலையில் சில மணி நேரம் வேலை... இடையில் உள்ள நேரங்களில் வேலை செய்ய வேண்டும்' என்று ஒரு சில தொழில்கள் இருக்கும். அந்தத் தொழில்களிலேயே 12 மணி நேரத்திற்கு மேல் வேலை இருக்கக்கூடாது என்பது சட்டம்.
உதாரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூரில் இருந்து வேலைக்கு வருகிறார்கள் என்று வைத்துகொள்வோம். அவர்கள் காலையில், எழுந்து கிளம்பி, அலுவலகம் வருவது, 13 மணி நேர வேலை என்று பார்க்கும்போது கிட்டதட்ட 15 மணிநேரம் ஆகிவிடும். அப்போது மீதி இருக்கும் 9 மணிநேரத்தில் அவர்கள் என்ன செய்ய முடியும். அமெரிக்காவிற்கு சென்று இந்தியர்கள் வேலை பார்த்தால் கூட, அவர்கள் 40 மணிநேரத்திற்கு வேலை பார்க்கமாட்டார்கள். அங்கே அந்த நேரத்தை உயர்த்தவும் முடியாது. ஆனால், அதே அமெரிக்க கம்பெனி இந்தியாவிற்கு வரும்போது வேலைநேரத்தை நீட்டிக்க சொல்கிறது. தைரியம் இருந்தால், அவர்கள் நாட்டில் இந்தச் வேலை நேர நீட்டிப்பை கொண்டுவர வேண்டியது தானே. ஆக, இந்திய ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வளர பார்க்கின்றனர்" என்று காட்டமானார்.
"அதிக நேர வேலை என்பது இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக நிச்சயம் வேண்டும். இப்போது உள்ள வளர்ச்சி கட்டாயம் போதாது. ஆனால், இவ்வளவு வேகமாக வளரும்போதும், உற்பத்தி அதிகரிக்கும்போதும் மக்களின் நுகர்வு போதுமானதாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
எஸ்.என் சுப்பிரமணியம், நாராயண மூர்த்தி கூறுவதுப்போல 'ஒரு தலைமுறை கஷ்டப்பட்டால் தான், இனி வரும் தலைமுறைகள் செழிப்பாக இருக்க முடியும்'. ஆனால், அந்தக் கஷ்டத்தை யார்பட வேண்டும் என்று ஒன்று இருக்கிறது. எஸ்.என் சுப்பிரமணியம் ஞாயிற்றுகிழமைகளிலும் வேலை பார்க்கிறார் என்றால் அவருக்கு போதுமான சம்பளம் வருகிறது. அதனால் பார்க்கிறார். ஆனால், அதே அளவுக்கான சம்பளம் அதாவது வேலைகேற்ப சம்பளம் அந்த நிறுவனத்தின் கடைசி தொழிலாளருக்கும் அதிக மணிநேரங்கள் வேலை பார்க்கும்போது கிடைக்குமா?” என கேட்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.
மேலும் தொடர்பவர், ``உங்கள் நிறுவனம், பங்குதாரர்கள் நன்றாக இருக்க, தொழிலாளர் எந்த பலனும் இல்லாமல் ஏன் கடுமையாக 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். நீங்களை சம்பளத்தைக் கூட்டினால், தொழிலாளர்களே தாராளமாக வேலைப்பார்க்க வருவார்கள்.
உதாரணமாக, 8 மணி நேர வேலைக்கு 20,000 ரூபாய் சம்பளம். இன்னும் அதிகமாக 4 மணிநேரம் வேலை பார்த்தால் இன்னுமொரு 20,000 ரூபாய் என்றால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்க்க வருவார்கள். ஆனால், இதற்கு முன்வராமல், தொழிலாளர்கள் மட்டும் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது நியாயமானது இல்லை. எஸ்.என் சுப்பிரமணியத்தின் சம்பளம் கிட்டதட்ட ரூ.51 கோடி. ஆனால், அந்த நிறுவனத்தின் கடைசி ஊழியரின் சம்பளம் ரூ.20,000. உங்களில் 1 சதவிகிதம் கூட சம்பளம் வாங்காத ஒருவரை எப்படி 90 மணி நேரம் வேலை செய்ய சொல்ல முடியும்? என்ன தான் சம்பளம், பணம் என்று பார்த்தாலும், குடும்பத்தை தாண்டிய இப்படிப்பட்ட ஒன்று தேவையில்லாதது தான்" என்று முடித்தார்.
இங்கு இப்போது 8 மணி நேரம் வேலை என்று தான் சட்டம் உள்ளது. ஆனாலும் நம்மில் பலரும் 10 முதல் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலை தான் எதார்த்ததில் உள்ளது. இதுவே 12 மணி நேர வேலைக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டால், 15 மணி நேரத்துக்கு வேலை செய்ய வேண்டிய நிலை தான் வரும். தொடர்ந்து தொழிலதிபர்கள் இவ்வாறு பேசுவதும் சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் விளக்கமாக எதிர்வினை ஆற்ற வேண்டும். காரணம் இது வாக்களித்த மக்கள் போராடி, புரட்சி செய்து பெற்ற உரிமை!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs