Rekhachithram Review: சுவாரஸ்யமான ஒன்லைன்; மம்மூட்டி AI கேமியோ; மீண்டும் மிரட்டுகிறாரா ஆசிஃப் அலி?
சூதாட்டத்திற்கு அடிமையாகி தன்னுடைய பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார் காவல் அதிகாரி விவேக் (ஆசிஃப் அலி). இந்த சஸ்பென்ஷன் அவருடைய நற்பெயருக்குக் களங்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால் பல அவமானங்களையும் சந்திக்கிறார். எப்படியாவது பணிக்குத் திரும்பி நல்ல பெயரை வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறார் விவேக். அப்படி மீண்டும் பணிக்குத் திரும்பி மலக்கபாரா பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு ராஜேந்திரன் (சித்திக்) ஒரு காணொளியின் மூலம் ஓப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் இடத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை 1985-ல் புதைத்ததாகவும், இந்தக் கொலையில் என்னுடன் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அவர் சொல்லிவிடுகிறார். அதனைத் தொடர்ந்து அந்த இடத்தைத் தோண்டி ஒரு பெண்ணின் எலும்புகளைக் கண்டறிகிறார். அந்த எலும்பு யாருடையது, எதற்காக இந்தப் பெண்ணைக் கொலை செய்தனர் எனப் பல கேள்விகளுக்கு விடை காண முயலும் த்ரில்லரே இந்த ரேகாசித்ரம் மலையாள திரைப்படம்.
வேலையிழந்த சமயத்தில் அவமானத்தைச் சந்தித்து அதிலிருந்து மீண்டெழத் துடிப்பவராகவும், காவல் அதிகாரியாக மிடுக்கான உடையிலும் மிரட்டுகிறார் ஆசிஃப் அலி. காவல் அதிகாரிக்குத் தேவைப்படும் உடல்மொழியைக் கச்சிதமாக வெளிப்படுத்தி, படத்திற்குக் கனம் கூட்டியிருக்கிறார். மம்மூட்டியின் தீவிர ரசிகையாக இருக்கும் அனஸ்வரா ராஜன், விளையாட்டுப் பெண்ணாக வந்து, வசீகரிக்கும் நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்.
சினிமா படப்பிடிப்பு தளத்தில் அதீத ஆர்வத்துடன் சுற்றித் திரியும் அனஸ்வரா தனது கண்களாலேயே சினிமா மீதான காதலை வெளிப்படுத்தி க்ளாப்ஸ் வாங்குகிறார். வழக்கமான கார்ப்ரேட் வில்லனாக வரும் மனோஜ் கே.ஜெயனின் நடிப்பில் குறையேதுமில்லை. மற்றொரு பக்கம், குறைவான காட்சிகளில் வந்தாலும் சரின் ஷிகாப்வ், டெரிஃபிக் வில்லி கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் நடிப்பைக் கொடுத்து நமக்குப் பயத்தையும் பதைப்பதையும் அதிகப்படுத்துகிறார். நடிகர் இந்திரன்ஸ் தனது சிறு சிறு நய்யாண்டிகளால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.
வழக்கமான த்ரில்லர் ஃபார்முலாவுடன் இந்தப் படத்தைத் தொடங்கிய இயக்குநர் ஜோஃபின் சாக்கோ, அடுத்தடுத்த நகர்வுகளில் புதுமையான திரைக்கதை ஃபார்முலாவைக் கொண்டு சப்ரைஸ் செய்கிறார். பெரும்பான்மையான த்ரில்லர் படங்களில் கொலையை மையமாக வைத்து கொலை செய்தவர் யாரெனத் தேடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் கொலைகாரனைப் படத்தின் தொடக்கத்திலேயே அறிமுகம் செய்துவிட்டு, அதைச் சட்டப்பூர்வமாக நிரூபிப்பதற்குக் கொலைக்கான காரணத்தைக் கதாநாயகன் தேடுவதாக அமைத்துக் கவனிக்க வைக்கிறார் இயக்குநர். சில எலும்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு யார் அவர், அவருக்குப் பின்னிருக்கும் கதையென்ன என டாப் ஸ்பீடில் நகர்த்தி, 'வாவ்' சொல்ல வைக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜான் மாந்திரக்கல் மற்றும் ராமு சுனில்.
கடந்தகாலம், நிகழ்காலம் எனக் குழப்பமில்லாமல் கதைசொல்லும் இவர்களின் அடர்த்தியான எழுத்துப்பணி நம்மை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும், கலகலப்பாகவும் சீட்டின் நுணியில் அமர்ந்து பார்க்க வைக்கிறது. ஆனால், இப்படியான இறுக்கமான முடிச்சுகளை முதலில் போடுவதற்குப் பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்த இவர்கள் அந்த முடிச்சைச் சுலபமாக அவிழ்த்து ஏமாற்றத்தையும் கொடுக்கிறார்கள்.
1985-ல் வெளியான மம்மூட்டியின் `காதோடு காதோரம்' திரைப்படத்துடன் ஒரு கனெக்ட் வைத்து சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு நாஸ்டால்ஜிய உணர்வைக் கொடுக்கிறது இவர்களின் எழுத்து. இந்தப் படப்பிடிப்புத் தளக் காட்சிகளில் வரும் மம்மூட்டி மற்றும் இயக்குநர் பரதனின் ஏ.ஐ கேமியோகள் அடிப்பொலி ரகம் ஜோஃபின் சாக்கோ சேட்டா!
காவல் அதிகாரி விவேக்கின் எமோஷனை கடத்தும் க்ளோஸ் அப் ஷாட், மலக்காபாரா பகுதியை அலசிக் காட்டும் ஏரியல் ஷாட் எனக் கதாபாத்திரங்களுடன் துணையாக நகர்ந்து ஒளிப்பதிவாளர் அப்பு பிரபாகர் முத்திரைப் பதிக்கிறார். `Non - Linear' கதையை அத்தனைக் கச்சிதமாகக் கோர்த்த படத்தொகுப்பாளர் ஷமீர் முகமது, படம் முடிந்த பிறகும் நகரும் அந்த தேவையில்லாத காட்சியை வெட்டியிருக்கலாம்.
எழுத்தும், கதாபாத்திர உணர்வுகளும் படத்தின் பதைபதைப்பைக் கூட்டும்போது அதற்குத் துணையாக இல்லாமல் வேறு ஒரு களத்தில் பின்னணி இசை நகர்வது ஏமாற்றம்! இயக்குநர் பரதன் மற்றும் மம்மூட்டியின் கேமியோவை இன்றைய தேதியில் கிடைக்கும் தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு ஏ.ஐ மூலம் செம்மையான ரகத்தில் கொண்டு வந்திருக்கும் தொழில்நுட்ப குழுவைப் பாராட்டலாம்.
80ஸ் நாஸ்டால்ஜிய உணர்வைக் கொடுத்து த்ரில்லரின் புதிய பாதையில் நகரும் இந்த ரேகாவின் சித்திரமான `ரேகாசித்திரம்' பந்தயமடிக்கும் மாலிவுட் படைப்பு!