படங்கள் ஓடவில்லை... நான் என்ன தவறு செய்தேன்?: ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை நிகழ்வில் தன் திரை வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜன. 14 ஆம் தேதி வெளியாகிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தபாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, ”மிக அழகான மேடை. இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மெனன் பெயருக்குப் பின் ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள்; என் மீதான நம்பிக்கைதான். திரை வாழ்க்கையில் நிறைய விஷயங்களை உடைத்துள்ளேன். இது மட்டும் ஏன் கூடாது?
நடிகர் ஷாருக்கானை பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை. அவர்கள் இல்லாமல் நாம் இல்லை, இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை பின்தொடர்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தவறு செய்தேன்? என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த ஆண்டே என் மூன்று படம் ஹிட்.
துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பதுதான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த ஆண்டு மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். இயக்குநர் பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் பல விஷயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதேபோல், ஜென் ஜி (Gen Z) தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யு/ஏ சான்றிதழ் படம். அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள்” எனத் தெரிவித்தார்.