உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!
Marco Review: ரத்தம் தெறிக்க தெறிக்க உன்னி முகுந்தனின் ஒரு ஆக்ஷன் சினிமா! - ஆனால் கதை எங்கே பாஸ்?
மலையாள இயக்குநர் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் வெளியான `மைக்கேல்' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உன்னி முகுந்தனின் மார்கோ கதாபாத்திரத்தை மட்டும் தனியாக வைத்து ஒரு `ஸ்டாண்ட் அலோன்' திரைப்படமாக `மார்கோ' படத்தை இயக்கியிருக்கிறார் ஹனீஃப் அதேனி. தமிழில் இன்று இத்திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
அதிரடிக்காரராக குடும்பத்துக்கு எதிராக நிகழும் அநியாயங்களை அடித்து நொறுக்கி குடும்பத்தை பாதுகாக்கிறார் மார்கோ ( உன்னி முகுந்தன்). உடன் பிறந்த சகோதரர் இல்லையென்றாலும் தன்னை எடுத்து வளர்தததற்காக ஜார்ஜ் (சித்திக்) குடும்பத்துக்கு அவ்வளவு விஸ்வாசமாகவும் காவலாகவும் இருக்கிறார். ஜார்ஜின் உடன்பிறந்தவர்களான விக்டர், நான்ஸி என இருவரையும் தன்னுடைய உடன் பிறந்தவர்களாக நினைத்து பாசத்தையும் காட்டுகிறார் இந்த அதிரடிக்காரர். விக்டர் பார்வை மாற்றுத்திறனாளி.
அதுமட்டுமல்ல ஃபெர்ஃப்யூம்களின் காதலன். கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய காதலியுடன் இருக்கும் விக்டரை வில்லன் டோனியின் ( ஜகதீஷ்) மகன்கள் கொலை செய்துவிடுகிறார்கள். கொலையாளிகளை தேடிக் கண்டுப்பிடித்து மார்கோ பழித்தீர்த்தாரா? விக்டரின் வாரிசை வில்லன் கேங்குகளிடம் மீட்டாரா? என்பதை ரத்தம் தெறிக்க சொல்கிறது இந்த மாலிவுட் சினிமா.
படம் முழுவதும் கோபக்காரராக, ஆக்ரோஷமான டோனில் மிரட்டுகிறார் உன்னி முகுந்தன். இதுமட்டுமல்ல, மிஷனை முடித்துவிட்டு மார்கோவாக மாஸ் நடைபோடும் காட்சிகளில் `க்ளாப்ஸ்' தட்ட வைக்கிறார். எமோஷனல் காட்சிகளிலும் உன்னி முகுந்தனின் நடிப்பில் குறையேதுமில்லை. கொடுத்த கதாபாத்திரத்தின் கனத்தை புரிந்து நடிப்பின் மூலம் திரையில் அனல் பறக்க வைத்திருக்கிறார் நடிகர் சித்திக். அதிலும் அந்த ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சியில் வெளிப்படும் அத்தனை மேனரிசமும் அடிப்பொலி சேட்டா! முக்கிய வில்லனாக நடிகர் ஜகதீஷ் வெறுக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்து வில்லனாக முத்திரைப் பதிக்கிறார்.
மற்றொரு புறம், இவரின் மகனாக வரும் அபிமன்யூ திலகன் டீசன்ட்டான பெர்ஃபாமென்ஸைக் கொடுத்திருக்கிறார். இதை தாண்டி ஜகதீஷின் வளர்ப்பு மகனாக வரும் கபீர் துகன் சிங் ஓவர் ஆக்டிங் கொடுத்து நடிப்பில் சொதப்பியிருக்கிறார். பெண் கதாபாத்திரங்களை அதிகமாக சேர்த்திருந்தாலும் அவர்களுக்கான பெர்பாமென்ஸ் ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் கதாபாத்திரங்களை வீணடித்திருக்கிறார் இயக்குநர்.
படம் முழுக்க ரத்தம் தெறிக்கும் பல ஸ்டண்ட் காட்சிகளை சேர்த்து மாஸ் தருணங்களைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர். அந்த மாஸ் விஷயங்கள் மட்டுமே முழுமையாக படத்தை தாங்கிப் பிடிக்கும் என நம்பியிருக்கிறார் இயக்குநர். ஆனால், அந்த நம்பிக்கை அவரையும் நம்மையும் ஏமாற்றியிருக்கிறது. வலுவின்றி அமைந்திருக்கிற கதையும் தொடங்கும் புள்ளியும் மோதல் புள்ளியும் ஆக்ஷன் காட்சிகளை தாண்டி தனியாக பல்லிளிக்கிறது. எடுத்துக் கொண்ட கதையையும் நேர்த்தியான வடிவில் கொடுக்காமல் லாஜிக் ஓட்டைகளை ஆங்காங்கே காற்றில் பறக்க விட்டிருக்கிறார். முதல் பாதியிலேயே படத்தின் கதையை முடிவுக்கு கொண்டு வந்த இயக்குநர் வீணாக அவ்வளவு பெரிய இரண்டாம் பாதியை விரித்து சோர்வை உண்டாக்குகிறார்.
படத்தில் இடம்பெற்றிருக்கும் அதீத வன்முறை காட்சிகளும் இரண்டாம் பாதியில் சலிப்பை ஏற்படுத்துகிறது. `வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தால்தான் அது ஆக்ஷன் திரைப்படம்' என்கிற தவறான பார்முலாவை பின்பற்றி டஜன் கணக்கில் தேவையில்லாத வன்முறை காட்சிகளைக் அள்ளிக் கொட்டியிருக்கிறார். ஓரளவுக்கு மேல் அந்த திணிப்பும் திகட்ட வைக்கிறது. இதைதாண்டி டானுக்கு கையில் முத்தம் கொடுத்து மரியாதை தெரிவிக்கும் வழக்கொழிந்துப் போன பழைய கேங்ஸ்டர் படங்களின் விஷயங்களையும் படத்தில் திணித்து க்ரிஞ்சை உணர வைத்திருக்கிறார் இயக்குநர்.
அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் `First Point Perspective, Dolly zoom in & out' என கனலாய் பறந்து படம் பிடித்து ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ். மாஸ் தன்மையை கூட்டுவதற்கு இவருடைய ஸ்டைலிஷ் ப்ரேம்களும் பெரும் பங்காற்றியிருக்கிறது. படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் பறந்து மாறி மாறி வெட்டிக் கொள்ளும் சில அதீதமான வன்முறை காட்சிகளை எடிட்டர் ஷமீர் முகமது துண்டாக வெட்டியிருக்கலாம்.
பின்னணி இசையில் ஒவ்வொரு காட்சியையும் உச்சத்தில் தூக்கி நிறுத்துகிறார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். அதீதமாக இருந்தாலும் அத்தனை ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்டண்ட் மாஸ்டரின் அவ்வளவு நேர்த்தியான உழைப்பை பார்க்க முடிகிறது. அதே ஆக்ஷன் காட்சிகளில் கதாபாத்திரங்களின் இரத்த ஒப்பனை ஓவர்டோசேஜ் பாஸ்!
ஆக்ஷன் காட்சிகள் கவனம் செலுத்திய இயக்குநர் கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் இந்த மார்கோ `OG' டானாக கோலோச்சியிருப்பார்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...