தில்லியில் தாமரை மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
தில்லியில் தாமரை மலரும் என்று நம்புவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரசை விமர்சித்துப் பேசினார்.
தில்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு நமோ பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தில்லியின் நியூ அசோக் நகரில் இருந்து உ.பி.யின் ஷஹிபாபாத் நகர் வரை இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
தில்லி ரோகினி பகுதியில் உள்ள ஜப்பானிய பூங்காவில் நடந்த 'பரிவர்தன் பேரணி'யில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தில்லியை விக்சித் பாரத் திட்டத்தின் தலைநகராக உருவாக்க வேண்டும். தில்லியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மக்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். பாஜகவால்தான் தில்லியை வளர்க்க முடியும்.
இதையும் படிக்க | பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!
நாம் 2025 ஆம் ஆண்டில் இருக்கிறோம். அடுத்த 25 ஆண்டுகள் முழு நாட்டின் எதிர்காலத்திற்கும் முக்கியமானதாக இருக்கும். 25 ஆண்டுகளில் இந்தியா விக்சித் பாரதமாக மாறும். அதில் நாமும் அங்கம் வகிப்போம். இந்தியா நவீனமயமாக்கலின் புதிய சக்தியாக மாறும். மேலும், உலகின் மூன்றாவது பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் காலம் விரைவில் வரப்போகிறது. அதற்கு தில்லியின் பங்களிப்பு அவசியம்” என்று பேசினார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “கடந்த 10 ஆண்டுகளில், ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லி துன்பகரமான நிலையில் மாறியுள்ளது. தில்லி தற்போது வளர்ச்சியை விரும்புகிறது. எனவே, மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பாஜக நல்லாட்சியை கொடுக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
இதையும் படிக்க | திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை: ஓயோ புதிய விதிமுறை!
வட இந்தியாவிலும், ஒடிசா மற்றும் ஹரியானாவில் பாஜகவுக்கு தொடர்ந்து மூன்று முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. தில்லியிலும் மீண்டும் ஒருமுறை எம்.பி.க்கள் அனைவருக்கும் மக்கள் ஆசி கிடைத்தது. தற்போது, சட்டசபை தேர்தலில் பாஜகவின் தாமரை மலரும் என நம்புகிறேன்” என்று பேசினார்.