அணி வீரர்கள் காயம்: மாற்று வீரராக களமிறங்கிய உதவிப் பயிற்சியாளர்!
Kerala: `வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்' -எம்.எல்.ஏ கைது; போலீஸை விமர்சித்த கோர்ட்.. என்ன நடந்தது?
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத எம்.எல்.ஏ
கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் ஆதரவுடன் வெற்றிபெற்று மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். இவர் காங்கிரஸ் பாரம்பர்ய குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சி.பி.எம் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் சி.பி.எம் கூட்டணி தலைமையிலான பினராயி விஜயனின் ஆட்சி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்த பி.வி.அன்வர் எம்.எல்.ஏ கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக தனது தொகுதியான நிலம்பூர் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் அதிக மக்களை திரட்டி பொதுக்கூட்டங்களை நடத்தினார்.
அவருக்கு மக்கள் அதிக ஆதரவு இருப்பதாக கூறி மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி டி.எம்.கே என்ற இயக்கத்தைத் தொடங்கினார். டொமாக்ரட்டிக் மூவ்மெண்ட் ஆஃப் கேரளா என்பதன் சுருக்கமே டி.எம்.கே ஆகும். டி.எம்.கே கட்சி மூலம் மக்கள் பிரச்னைகளை முன் வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார் பி.வி.அன்வர் எம்.எல்.ஏ.
வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், கருளாயி பகுதியில் காட்டு யானை மிதித்ததில் மணி என்ற பழங்குடியின இளைஞர் மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, வன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.வி.அன்வர் எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 40 பேர் நிலம்பூர் வனத்துறை அலுவலகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில் போலீஸுடன் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து நிலம்பூர் வன அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக எம்.எல்.ஏ பி.வி அன்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே பி.வி.அன்வர் எம்.எல்.ஏ-வை கஸ்டடியில் விசாரணை நடத்த போலீஸார் இன்று கோர்ட்டில் அனுமதி கேட்டனர். ஆனால், அந்த வழக்கில் 11 பேர் உள்ள நிலையில் எம்.எல்.ஏ பி.வி.அன்வரை மட்டுமா உங்களால் அடையாளம் காண முடிந்தது என போலீஸை விமர்சித்த கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து டி.எம்.கே கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பி.வி.அன்வர் எம்.எல்.ஏ-வின் ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், "நிலம்பூரில் வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பி.வி.அன்வரின் தூண்டுதலே காரணம். அன்வர் தலைமையிலான கூட்டத்தினர் போலீஸ் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸ் அதிகாரிகளை தள்ளிவிட்டதில் அவர்கள் தரையில் விழுந்து காயம் ஏற்பட்டது. வனத்துறை அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் 35,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமானது" என்று ரிமாண்ட் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்த எம்.எல்.ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட அன்றே கோர்ட் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரள அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.