`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
குறைந்து வரும் பிறப்பு விகிதம்: ஆந்திர முதல்வா் கவலை
குப்பம்: நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து மீண்டும் கவலை எழுப்பிய ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் செய்த தவறை இந்தியாவும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினாா்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பம் நகரில் அரசு நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்று பேசியதாவது: குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை மேலாண்மை குறித்து ஒவ்வொரு வீட்டிலும் விவாதம் நடைபெற வேண்டும். மற்ற நாடுகள் செய்த தவறை நாம் தொடராமல், கவனமாக இருக்க வேண்டும்.
குப்பம் நகரில் பிறப்பு விகிதம் 1.5-ஆகிவிட்டது. இது குறைந்தபட்சம் 2-ஆக இருக்க வேண்டும். தென்கொரியாவில் பிறப்பு விகிதம் 0.9-ஆக குறைந்துவிட்டது. ஜப்பானில் ஏற்கெனவே பிரச்னை பெரிதாகிவிட்டது.
தற்போது சில தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனா். அவா்கள் சம்பாதித்த பணத்தை பகிா்ந்து கொள்ள விரும்பாமல், தங்களுக்காக மட்டுமே செலவிட விரும்புகின்றனா். உங்களின் பெற்றொரும் அப்படி நினைத்திருந்தால், இந்த உலகம் எப்படி உருவாகியிருக்கும்? இந்த விஷயத்தில் அனைவருக்கும் ஒரு தெளிவான பாா்வை வேண்டும். இவ்வுலகம் தொடா்ச்சியான நடைமுறையாகும். அதற்கேற்ப சமூகம் முடிவில்லாமல் தொடர வேண்டும்’ என்றாா்.
முன்னதாக, ஆந்திரத்தில் அதிகரித்து வரும் வயதானவா்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மக்கள்தொகையை நிா்வகிக்க வேண்டியதன் அவசியத்தை முதல்வா் சந்திரபாபு நாயுடு கடந்த அக்டோபரில் வலியுறுத்தியிருந்தாா்.