படகு பழுதாகி இலங்கைச் சென்ற தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்பு!
நாகை: நடுக்கடலில் படகு என்ஜின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை துறைமுகம் அழைத்துவரப்பட்டனர்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகூர் சம்பாத்தோட்டம் சேர்ந்த வளர்மதி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கக் கடந்த டிச.29 ஆம் தேதி அதிகாலை புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் நாகைக்கு கிழக்கே சுமார் 145 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது டிச .30 அதிகாலை படகின் என்ஜின் பழுதடைந்தது.
இதையடுத்த நடுக்கடலில் சிக்கித் தவித்த மீனவர்கள், மீனவளத்துறையினருக்கும் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இந்தியக் கடற்படையினர், மீனவளத்துறையினர் இணைந்து, மீனவர்களை மீட்க நிகழ்விடத்திற்கு சென்றனர். ஆனால் அந்தப் பகுதியில் மீனவர்களும் படகும் இல்லை.
இந்நிலையில் படகுடன் மாயமான ஒன்பது மீனவர்கள் காற்றின் திசையால், இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக இலங்கை அரசரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மீனவர்களை மீட்டு வர அனுமதி பெறப்பட்டது.
இதையடுத்து கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் இலங்கை கடலோர பாதுகாப்புப்படை, நாகை மாவட்டம் நாகூர் செல்வமணி, வானவன்மகாதேவியை சேர்ந்த பழனிவேல், பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்டம் நாயக்கர்குப்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜேஷ்செல்வம், குமார், இளங்கோவன் ரஞ்சித் உள்ளிட்ட 9 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டு நாகை துறைமுகத்திற்கு திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.