தமிழகத்தில் இருவருக்கு HMPV தொற்று உறுதி... எப்படிப் பரவும், என்ன செய்ய வேண்டும்?
பரவும் HMPV தொற்று!
ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா பேரிடர் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்திலிருந்து இன்னும் மக்கள் முழுவதுமாக மீளவே இல்லை. இந்நிலையில், மீண்டும் சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எனப்படும் HMPV என்ற புதிய வகை வைரஸ் பரவுவதாகச் செய்திகள் வெளியாகின. சீனாவில் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்த வகை வைரஸ் தொற்று இந்தியாவில் பரவுவதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு பேருக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்திருந்தது. அதேநேரத்தில் ஒரு குழந்தை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. பெங்களூரைத் தொடர்ந்து குஜராத்தில் ஒரு குழந்தைக்கும், சென்னை, சேலத்தில் தலா ஒரு குழந்தைக்கும் HMPV தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை வைரஸ் தொற்று 14 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடம் மிக எளிதாகப் பரவுவதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எப்படிப் பரவும்! என்ன செய்யவேண்டும்!
வைரஸ் பரவுதல் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், "இந்த வகை வைரஸ் சீனாவிலிருந்து இப்போது பரவியிருக்கிறதா என்று கேட்டால் அதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. காரணம் HMPV வகை வைரஸ் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இந்தியாவிலேயே இருக்கிறது. காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை போல, இவ்வகை வைரஸ் சளி மற்றும் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும். ஆனால், அது தீவிர பாதிப்பாக இருக்காது. சீனாவில் பரவும் அதே வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா அல்லது அதன் திரிபு வகை இந்தியாவில் பரவுகிறதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மூக்கில் நீர் வடிதல், தொண்டை எரிச்சல், காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இந்த வைரஸ் தொற்று காரணமாக ஏற்படக் கூடும். சளி, காய்ச்சல் ஏற்படும்போது வீட்டில் மருத்துவம் பார்க்காமல் கண்டிப்பாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லவேண்டும். சரியான உணவு மற்றும் மருந்து எடுத்துக்கொண்டால் விரைவிலேயே சரியாகிவிடும். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்த இரு குழந்தைகளுமே நன்றாக இருக்கிறார்கள். மேலும், மருத்துவத்துறை அதிகாரிகள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த வகை வைரஸ் பரவுகிறது என்று பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம். இந்த வைரஸ் கொரோனாவை போலவே தும்மல், இருமல் ஒருவரிடலித்திருந்து மற்றவருக்கு மிக எளிதாக இந்த வைரஸ் பரவக்கூடும். எனவே, கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணிவது, இருமல், தும்மல் வரும்போது முகத்தை மூடிக்கொள்வது அவசியம். அனைத்து வயதினருக்கும் இவ்வகை வைரஸ் தொற்று பரவினாலும், அதிகளவில் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இவ்வவை வைரஸால் பாதிப்பு ஏற்படும். குறைந்தது ஒரு வாரம் வரை இந்த வைரஸ் உடலில் உயிர்வாழக் கூடும். ஆஸ்துமா போன்ற தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வகை வைரஸ் நிமோனியா போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். தமிழகத்தைப் பொறுத்தவரை, கண்காணிப்பு தீவிர தீவிரப்படுத்தப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்" என்றார்கள் விளக்கமாக.