உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் பதில்!
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்
இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணி முதல் அணியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தற்போது, ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தொடரை இழந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினையும் இந்திய அணி இழந்துவிட்டது.
இதையும் படிக்க: மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.