பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டான் 239 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களும், கைல் வெரைன் 100 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!
பாகிஸ்தான் ஃபாலோ ஆன்
பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஃபாலோ ஆன் ஆனது. பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 478 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கேப்டன் ஷான் மசூத் அதிகபட்சமாக 145 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பாபர் அசாம் 81 ரன்களும், சல்மான் அகா 48 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 58 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா
தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா
58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 7.1 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டேவிட் பெடிங்ஹம் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தும், அய்டன் மார்க்ரம் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ரியான் ரிக்கல்டான் ஆட்ட நாயகனாகவும், மார்கோ யான்சென் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.