ஆப்கானிஸ்தான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்; அரசியல்வாதிகள் வலியுறுத்தல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
புறக்கணிக்க வலியுறுத்தல்
அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டுமென பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் கடிதம் ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலியை குறிவைப்பது நியாயமல்ல; யுவராஜ் சிங் ஆதரவு!
பெண்களுக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபட்டுள்ள தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான எந்த ஒரு அடக்குமுறையையும் பொறுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஆஸி.யை வீழ்த்தும் வழி எங்களுக்குத் தெரியும்: ககிசோ ரபாடா
கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடாதது குறிப்பிடத்தக்கது.