`இனி பொதுமக்களுக்கு இது கிடைக்காது!' - சத்தமே இல்லாமல் தேர்தல் விதிகளில் திருத்த...
IFFK: 5 முக்கிய விருதுகளைப் பெற்ற மலையாள சினிமா; நிறைவு பெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழா
29-வது கேரள சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்தத் திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் கேரள முதல்வர் பினாரயி விஜயன், அமைச்சர் சஜி செரியான் மற்றும் பல திரைப் பிரபலங்கள் பங்குபெற்றனர்.
விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன்,``இந்தத் திரைப்பட விழாவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முயற்சித்திருக்கிறோம். இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பெண் இயக்குநர்கர்களின் திரைப்படங்கள்தான். இந்த வருடம் சுமார் 15,000 மக்கள் திரைப்பட விழாவில் பார்வையாளர்களாகப் பங்குபெற்றிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் சர்வதேச அளவில் இந்தத் திரைப்பட விழா ஒரு முக்கிய திரைப்பட விழாவாக மாறும்." என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் இந்த வருடத்திற்கான "Spirit of Cinema" விருது, `All we imagine as light' திரைப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியாவுக்கு வழங்கப்பட்டது.இந்த விருதைப் பெற்றப் பிறகு பேசிய பாயல் கபாடியா, “எனது முதல் படமே இப்படி மலையாளத்தில் இயக்குவது என்பது எனது பைத்தியக்காரத்தனமான யோசனை, ஆனால் கேரளாவிலுள்ள பலர் எனக்கு இந்த படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்க நிறைய உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த `Spirit of Cinema' விருது இனியும் பல சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை உருவாக்க எனக்கு உத்வேகமாக இருக்கும். இந்தப் படத்திற்குக் கேரளாவில் கிடைத்த ஆதரவு மிகப்பெரியது. கேரள மக்களுக்கும் தற்போது இந்த விருதைத் தந்த கேரள அரசிற்கும் எனது நன்றி" என்று கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் இந்த வருடத்துக்கான சிறந்த திரைப்படத்திற்கான `சுவர்ண சகோரம் (Golden Crow Pheasant Award)' விருது பெட்ரோ ஃப்ரெயர் இயக்கிய `Malu' என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான `ரஜத சகோரம் (Silver Crow Pheasant Award)' விருது ஃபர்ஷாத் ஹாஷேமி இயக்கிய `Me, Maryam, the children and 26 others' என்ற திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த வருடம் திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பைப் பெற்ற மலையாள திரைப்படம் `ஃபெமினிச்சி பாத்திமா' 5 விருதுகளைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இத்திரைப்படத்தை ஃபாசில் முஹம்மத் இயக்கியிருந்தார். ஆணாதிக்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த இந்தப் படத்தில் ஒரு மெத்தையை வைத்து பெண்ணிய அரசியலைக் கூறியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படம் `சிறந்த திரைக்கதைக்கான Juri விருது, சிறந்த படத்திற்கான NETPAC விருது, சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான FIPRESCI விருது போன்ற விழாவின் 5 முக்கிய விருதுகளைத் தட்டிச்சென்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்த வருடத்திற்கான 30வது சர்வதேச திரைப்பட விழா 2025 டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Vikatan Play:
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...