விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார்; முன்னாள் இந்திய வீரர் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என முன்னாள் இந்திய வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி மிகவும் வலுவாக தொடங்கியது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இருப்பினும், அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுக்கும் இடையிலான பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது.
இதையும் படிக்க: 5 நிமிடத்துக்கு முன்புதான் தெரியும்; அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த ஜடேஜா!
3 சதங்கள் அடிப்பார்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறி வரும் நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி இன்னும் இரண்டு சதங்கள் அடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேட்டன் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி இந்திய அணிக்காக நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகள் அவர் மீதான நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் நன்றாக விளையாடுவார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் அடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 3 சதங்கள் அடிப்பார் என கணித்திருந்தேன் என்றார்.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக டிராவிஸ் ஹெட்: ரவி சாஸ்திரி
இந்த ஆண்டு அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி 614 ரன்கள் குவித்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 376 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.