கவிழ்ந்த ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதி விபத்து! ஒருவர் பலி!
கடலூரில் 54 பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதியதில் ஒருவர் பலியானார்.
கன்னியாகுமரி செல்வதற்காக கடலூரில் ராமநத்தம் வழியாக ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) அதிகாலையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 54 பயணிகளுடன் கூடிய ஆம்னி பேருந்து, வெங்கனூர் ஓடை பாலத்தின் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. தொடர்ந்து, கவிழ்ந்த பேருந்தின் மீது அவ்வழியே வந்த லாரி மோதியது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது; மேலும், 27 பேர் வரையில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.