புஷ்பா 2 திரைப்படத்தால் பிடிபட்ட கடத்தல்காரர்!
மகாராஷ்டிரத்தில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை புஷ்பா 2 திரைப்பட திரையரங்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிரத்தில் விஷால் மெஷ்ரம் என்பவர் மீது 2 கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்பட 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காவல் அதிகாரியைத் தாக்கியதாகவும் இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரது நடவடிக்கைகளை சைபர் காவல்துறையினர் நீண்ட காலமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்துக்கு விஷால் செல்லவிருப்பதாக காவல்துறையினருக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, புஷ்பா 2 திரைப்படம் பார்ப்பதற்காக திரையரங்கு சென்று கொண்டிருந்த விஷாலை காவல்துறையினர் பின்தொடர்ந்தனர்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்... அதானியில் தொடங்கி அம்பேத்கர் வரை!
மேலும், திரையரங்கினுள் விஷால் சென்றவுடன், அவர் தப்பிப்பதைத் தவிர்க்கும் வகையில், விஷாலின் காரின் சக்கரங்களையும் காவல்துறையினர் கழற்றினர்.
இதனைத் தொடர்ந்து, திரையரங்கினுள் புஷ்பா 2 திரைப்படத்தைக் கண்டு கொண்டிருந்த விஷாலை காவல்துறையினர் சுற்றி வளைத்து, கையும்களவுமாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். புஷ்பா 2 திரைப்படமும் ஒரு கடத்தல்காரர் குறித்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.