மகன் பெருமையடைந்தால் போதும் சார்! விஜய் சேதுபதியிடம் தீபக் நெகிழ்ச்சி!!
பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை நினைத்து நடிகர் தீபக் நெகிழ்ச்சி அடைந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 11வது வாரத்தைக் கடந்துள்ளது. இதில் 76வது நாளில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடினார். இந்த வாரத்தின் கேப்டனாக விஷால் செயல்பட்டு வந்தார். அவரின் செயல்பாடுகள் உள்பட, வீட்டில் நடந்த பல சம்பவங்கள் குறித்து இதில் விவாதித்தார்.
ஜாக்குலினிடம் வருத்தப்பட்ட தீபக்
ஜாக்குலினிடம் தீபக் பேசிய விஷயம் குறித்து விஜய் சேதுபதி பதில் அளித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீடு கட்டும் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 நாள்களுக்கு இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு பிறகு ஜாக்குலினிடம் பேசிய தீபக் தன்னுடைய நிலையை எண்ணி வருந்தினார்.
பல இடங்களில் வாய்ப்பு தேடிச் செல்லும்போது, உங்களுக்கு என்ன, நீங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்தானே எனக் கூறுவார்கள். ஆனால், அதன்மூலம் எனக்கு கிடைத்தது என்ன? அது என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்கிறார்.
இதேபோன்று மக்களும் நினைத்துவிட்டு எனக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டால் என் நிலை என்னவாகும் எனு ஜாக்குலினிடம் வருந்திப் பேசுகிறார்.
அதோடு மட்டுமின்றி எனக்கு வயதாகிவிட்டது. நீங்கள் இளம் தலைமுறை. உங்களுக்கு இருக்கும் அளவுக்கு ஃபாலோயர்ஸ் (சமூகவலைதளத்தில்) எனக்கு இல்லை. நான் பேசுவதைக் கேட்கும் கூட்டம் கூட சொற்பம்தான் என வருத்தத்துடன் ஜாக்குலினிடம் கூறுகிறார்.
பாராட்டிய விஜய் சேதுபதி
வார இறுதி நிகழ்ச்சியில் இந்த வார சம்பவங்கள் குறித்து போட்டியாளர்களின் கருத்துகளைக் கேட்ட விஜய் சேதுபதி, தீபக்கிடமும் கருத்துகளைக் கேட்கிறார்.
பின்னர் பேசிய விஜய் சேதுபதி தீபக்கிற்கு ஊக்கமளிக்கும் வகையில், ’நீங்க வருத்தமே படாதீர்கள். நீங்கள் இதற்கு முன்பு நிகழ்ச்சி செய்ததிலிருந்தும், இங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் இருந்தும் நீங்கள் சம்பாதித்துள்ளது மிகப்பெரிய கூட்டம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்’ எனக் கூறிகிறார்.
இதற்கு பதில் அளித்த தீபக், ‘நீங்கள் சொன்னதால் நான் மகிழ்ச்சி அடைகிறேனோ இல்லையோ, வீட்டில் உள்ள என் மகன் பெருமை அடைவான் என நினைக்கிறேன். அதுவே எனக்குப் போதும் சார்’ என்கிறார்.
நிச்சயம் உங்கள் மகன் உங்களை நினைத்து பெருமைகொள்வார். நம் வளர்ச்சியைக் கண்டு நம் குழந்தைகள் மகிழ்ச்சி கொள்வது மிகப்பெரிய ஆனந்தம். அதை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். அதை நீங்களும் அடைந்துள்ளீர்கள் என விஜய் சேதுபதி குறிப்பிட்டார்.
தீபக் - விஜய் சேதுபதி இடையே நடந்த இந்த விவாதம் பலரை நெகிழ்ச்சி அடைய வைத்தது. மஞ்சரி உள்ளிட்ட சில போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: விஜய் சேதுபதியிடம் பாராட்டுகளைப் பெற்ற ஜாக்குலின்!