குடியரசு நாள் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு இடமில்லை!
புதுதில்லி: அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம், தில்லிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 4வது ஆண்டாக, இந்தாண்டும் தில்லி அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், மத்திய அரசை தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கண்டித்து விமர்சித்துள்ளார்.
அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது, “இந்த ஆண்டும் தில்லி அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளது? தில்லி மக்களை குடியரசு நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுப்பது ஏன்? இது என்ன மாதிரி அரசியல்? தில்லி மீது இவ்வளவு வெறுப்புணர்வு ஏன்? இத்தகைய தலைவர்களுக்கு தில்லி மக்கள் எதற்காக வாக்கு செலுத்த வேண்டும்?” எனப் பேசியுள்ளார்.