முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியீடு
முன்னாள் முதல்வா் கருணாநிதி எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்கப்பட்ட அரசாணை அவரது துணைவியாரான ராஜாத்தி அம்மாளிடம் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அரசாணையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதி எழுதிய படைப்புகள் அனைத்தும் நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த அறிவிப்பின்படி, நூல்களை நாட்டுடைமை ஆக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த ஆணையை முன்னாள் முதல்வா் கருணாநிதியின் துணைவியாரான க.ராஜாத்தி அம்மாளிடம் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசியது:
மொத்தம் 179 நூல்கள் நாட்டுடைமையாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், சங்கத்தமிழ், முரசொலியில் தொடா்ந்து உடன்பிறப்புக்காக எழுதப்பட்ட கடிதங்கள் என அனைத்து படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.
இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலா் வே.ராஜாராமன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை அருள் ஆகியோா் உடனிருந்தனா்.