நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர...
Digital Arrest : வீடியோ காலில் கைதுசெய்த கும்பல்; 10 நாள்களில் ரூ.1.33 கோடியை இழந்த முதிய தம்பதி!
மும்பை கோரேகாவ் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் வங்கி ஊழியர் ஒருவருக்கு, கடந்த மாதம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்தார். போனில் பேசிய நபர் அப்பெண்ணிடம், உங்களது மொபைல் நம்பர் ரூ.500 கோடி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளது என்றும், அது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். அதோடு அந்த நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவரை போலீஸ் அதிகாரி என்று கூறி அறிமுகம் செய்து அவருக்கு போனை மாற்றிவிட்டார்.
அந்த நபர் அப்பெண்ணிடம் வீடியோ காலில் வரும்படி கேட்டுக்கொண்டார். அதோடு எப்போதும் வீடியோ காலில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உறங்கும்போதுகூட வீடியோ காலில் இருக்கவேண்டும் என்று கூறி அப்பெண்ணை எங்கேயும் போகவிடவில்லை. அவரிடம் வங்கியில் நடந்த ஒரு மோசடி குறித்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்பெண் தனக்கு அந்த வங்கியில் கணக்கே கிடையாது என்று தெரிவித்தார். ஆனால் அதனை நம்பமுடியவில்லை என்று கூறிய நபர், `விசாரணை முடியும் வரை உங்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை, நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யுங்கள்' என்று கேட்டுக்கொண்டனர்.
அப்பெண்ணும் பயத்தில் அவர்கள் சொன்னபடி செய்தார். அப்பெண் தனது கணவரிடம் இது குறித்து தெரிவித்தார். அவர் இது குறித்து பிள்ளைகளிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அப்பெண் ஒரு மாதத்தில் ரூ.1.33 கோடியை மர்ம நபர் சொன்ன வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்திருந்தார். அப்பெண் பெயரில் வங்கியில் ரூ.35 லட்சம் வைப்புத்தொகை இருந்தது. அதனையும் எடுத்து தங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கூறி நிர்ப்பந்தம் செய்தனர். இதையடுத்து அப்பெண் வங்கியில் சென்று அப்பணத்தை எடுக்க சென்றார். ஆனால் அங்கு ஊழியர் பற்றாக்குறை காரணமாக அடுத்த நாள் வரும்படி கேட்டுக்கொண்டனர். அப்பெண் திரும்ப வரும்போது பத்திரிகையில் டிஜிட்டல் கைது தொடர்பான செய்தியை படித்தார்.
உடனே சந்தேகம் அடைந்து சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930க்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுவர்ணா ஷிண்டே கூறுகையில், ''சைபர் கிரிமினல்கள் சம்பந்தப்பட்ட பெண் வங்கி அதிகாரியை நவம்பர் முதல் வாரத்தில் தொடர்பு கொண்டு, `உங்களது பெயர் ரூ.500 கோடி மோசடியில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர். அதனால் அப்பெண் அச்சம் அடைந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு போலி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளனர். விசாரணை என்ற பெயரில் அவரிடம் இருந்த ரூ.1.33 கோடியை அபகரித்துள்ளனர். இது போன்ற மோசடியில் வயதானவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும்.
போலீஸார் யாரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்வது கிடையாது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். போலீஸார் வாட்ஸ்அப்பில் கைது வாரண்ட்களை அனுப்புவது கிடையாது'' என்றார். மும்பையில் மட்டும் இந்த ஆண்டு 102 டிஜிட்டல் கைது மோசடிகள் நடந்திருக்கிறது. இதில் ரூ.90 கோடி அபகரிக்கப்பட்டுள்ளது. 16 வழக்குகளில் மட்டுமே துப்பு துலங்கி இருக்கிறது.