சென்னை: பட்டப்பகலில் ஃபைனான்சியரை காரில் கடத்திய கும்பல்; 4 பேர் கைது; நடந்தது என்ன?
சென்னை சாலிகிராமம் பெரியார் தெருவில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் தம்பி துரை ரகுபதி (30). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 20.12.2024-ஆம் தேதி துரைரகுபதி, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாது, "நான் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறேன். எனது உறவினர் பியூலா ஹெலன் என்பவர் தனக்குச் சொந்தமான கார் ஒன்றை அவரின் குடும்பச் செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய்க்கு என்னிடம் அடமானம் வைத்திருந்தார். அந்தக் காரை நான் பயன்படுத்தி வந்தேன். இந்தச் சூழலில் அவசர தேவைக்காக அந்தக் காரை அடமானம் வைக்க முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்திருந்தேன்.
அப்போது காருக்கு பணம் தருவதாக குன்றத்தூரைச் சேர்ந்த கௌதம் என்பவர் போனில் என்னிடம் பேசினார். அதை நம்பி நானும் காரை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே கொண்டு சென்றேன். அப்போது அங்கு வந்த கௌதம், அவரின் நண்பர் ஸ்ரீதர் ஆகியோர் என்னிடம் பேசினார்கள். பின்னர் அவர்கள் காரில் ஏறி, "உனக்கு சுரேஷ் தெரியுமா?" என்று கேட்டப்படி, "அவனை எங்களிடம் காட்டிக் கொடு" என்று கூறினர். பின்னர் என்னை காரின் பின் இருக்கையில் தள்ளி விட்டு, ஸ்ரீதர் என் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். காரை கௌதம் ஓட்டிச் சென்றான். கோயம்பேடு நியூ காலனி பகுதியில் காரை நிறுத்திய போது ஒரு பெண் உள்பட மூன்று பேர் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை காரிலிருந்து கீழே தள்ளினான். பின்னர் அனைவரும் சேர்ந்து என் கன்னத்தில் ஓங்கி குத்திவிட்டு என்னிடம், "சுரேஷ் எங்கு இருக்கிறான் என்று ஒழுங்காகச் சொல், அவன் எங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எனக்கு விற்பனை செய்த காரை திரும்ப எடுத்துச் சென்று ஏமாற்றிவிட்டான். அவன் உன்னுடைய கூட்டாளி தானே? அவன் தர வேண்டிய பணத்தை நீ கொடுடா" என்று கூறியபடி காரையும் நான் வைத்திருந்த ஐபோனையும் பறித்து விட்டு அவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பின்னர் நான் அங்கிருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே என்னை வலுகட்டாயமாக காரில் கடத்தி அடித்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார், சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் கௌதம் அவரின் கூட்டாளிகள் செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் குன்றத்தூரைச் சேர்ந்த கெளதம் (27), அவரின் தோழி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஸ்வேதா (23), கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (32), அண்ணாநகரைச் சேர்ந்த கிஷோர் பாலாஜி (23) ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு போலீஸார் சுவேதா உள்பட 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து காரையும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ளவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.
காருக்காக ஃபைனான்ஸியர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...