காட்டு யானைகளைக் கண்காணிக்க டிரோன்கள்: தமிழக வனத்துறை திட்டம்!
ஏடிஎம்-ல் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடி; முதியவர்களைக் குறிவைக்கும் குழு; சிக்கியது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். 65 வயதான இவர், தனது மகளின் ஏ.டி.எம். கார்டுடன் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவரது கார்டை பயன்படுத்தி மிஷினில் முயற்சித்தபோது பணம் வரவில்லை. இதனால், அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரிடம் பணம் எடுக்க உதவுமாறு கூறியுள்ளார். அவரும் ஏ.டி.எம்-இல் பணம் வரவில்லை எனக் கூறி கார்டை வேறொரு திருப்பிக் கொடுத்திருக்கிறார். கார்டை சரியாகப் பார்க்காமல் வாங்கிய கலைச்செல்வன், அதே பகுதியில் உள்ள மற்றொரு வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார்.
அப்போதுதான் அந்த ஏ.டி.எம். கார்டு தனது மகளுடையது இல்லை எனத் தெரிய வந்திருக்கிறது. மீண்டும் முந்தைய ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றபோது, அந்த இளைஞர் மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று தனது மகளின் வங்கிக் கணக்கைச் சரிபார்த்துள்ளார். அப்போது, ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில், அவரது மகளின் கார்டை பயன்படுத்தி ரூ.90 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில், முதியவரை ஏமாற்றியது விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து எனத் தெரிய வந்தது. சிவகாசியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதே போல, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மகன் வேல்முருகன் அவரது ஏ.டி.எம் கார்டை தனது தாய் ராஜேஸ்வரிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனைக்குச் செல்வதற்காக மார்க்கெட் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்குக் கடந்த நவம்பர் 26-ம் தேதி சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார் ராஜேஸ்வரி. அப்போது மர்ம நபர்கள் இருவர் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ஏ.டி.எம் கார்டை வாங்கியுள்ளனர். பின்னர் ஏ.டி.எம் மையத்தில் பணம் இல்லை எனக் கூறி திருப்பி கொடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சிறிது நேரம் கழித்து மூதாட்டியின் கார்டு மூலம் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாகவும், நகைக்கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு நகை வாங்கியதாகவும் தனக்குக் குறுஞ்செய்தி வந்துள்ளதாக வெளிநாட்டில் உள்ள மகன் வேல்முருகன் போனில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸாரின் விசாரணையில் ஏ.டி.எம் கார்டை திருடிய நபர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மற்றொரு ஏ.டி.எம் மையத்தில் ரூ. 20 ஆயிரம் பணம் எடுத்ததும், வடக்கு ரத வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் 50 ஆயிரத்துக்குத் தங்க நாணயங்கள் வாங்கியதும் தெரிய வந்தது.
இந்நிலையில், ஏ.டி.எம் மையத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கரூர் மாவட்டம், குளித்தலை நெசவாளர் காலனியைச் சேர்ந்த காட்ஜான், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கருங்கடலைச் சேர்ந்த பீட்டர் பிரபாகரன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த பணம் ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது இதேபோல் விழுப்புரத்திலும் ஏ.டி.எம் மையத்தில் பணத்தைத் திருடியதாக வளத்தி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. மேலும் புதுக்கோட்டை, தேவகோட்டை, சாத்தான்குளம், கும்பகோணம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகளும் இவர்கள் மீது நிலுவையில் உள்ளதாக போலீஸார் கூறினர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...