பஞ்சாங்கக் குறிப்புகள் - டிசம்பர் 23 முதல் டிசம்பர் 29 வரை #VikatanPhotoCards
பரோலில் வந்து நண்பரைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; யார் இந்த காட்டேரி சுடலைமுத்து?
தூத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற காட்டேரி சுடலை முத்து. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது மாவட்ட முதன்மை நீதிமன்றம். அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவ்வப்போது பரோலில் வெளியே வந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைச் சந்தித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் பரோலில் சுடலைமுத்து சிறையிலிருந்து வெளியே வந்தபோது, அந்த சமயத்தில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜோதிநகர் பகுதியில் தனது நெருங்கிய நண்பரான அண்ணாநகரைச் சேர்ந்த மனோகரன் என்பவரைக் கொலை செய்தார்.
இந்தக் கொலை வழக்கில் சுடலைமுத்துவுக்கும், அவரின் கூட்டாளி ஞானசேகரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், ஞானசேகரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இக்கொலை வழக்கு விசாரணையின் முடிவில், சுடலைமுத்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறிக் கடந்த 4.12.2019-ல் விடுதலை செய்தது மாவட்ட முதன்மை நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடந்த 2021-ம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் பலகட்ட விசாரணைக்குப் பின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் அமர்வு, சுடலைமுத்து மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது எனக் கூறியது. இந்நிலையில், தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதிகள், “இந்த கொலை வழக்கில் சுடலைமுத்து குற்றவாளி என்பதால், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது” எனக் கூறினர்.
குற்றவாளி சுடலைமுத்துவிற்கு ‘காட்டேரி’ என்ற அடைமொழி எப்படி வந்தது என போலீஸர் தரப்பில் விசாரித்தோம்.
“தற்போது ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சீரியல் கில்லர் காட்டேரி சுடலைமுத்து, கடந்த 08.03.2001 முதல் 21.03.2001 வரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் பால் வியாபாரிகள் இருவர், ஆத்தூர் அருகில் உள்ள கீரனூரில் ஒரு பிச்சைக்காரர், உடன்குடியில் ஒரு ஆட்டோ டிரைவர், மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒரு மாற்றுத்திறனாளி என 13 நாட்களில் 5 பேரைக் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த 5 கொலை சம்பவங்களில் உயிரிழந்தவர்கள், ஒரே பாணியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். கழுத்தில் வெட்டுக் காயங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. ’கட்டேரி’ போல கொலை செய்திருக்கிறானே என போலீஸார் கூறப்பட்ட நிலையில், சுடலைமுத்துவிற்கு ’காட்டேரி சுடலைமுத்து’ எனச் சக ரெளடிகளே பெயர் சூட்டியுள்ளனர்.” என்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...