DMK: 'பருப்பு உசிலி, முந்திரி புலாவ்,...' - திமுக செயற்குழுக் கூட்டத்தின் மதிய உ...
தந்தை இறந்ததை மறைத்து ஓய்வூதியம் பெற்று மோசடி: மகன் கைது
ராமநாதபுரத்தில் தந்தை இறந்ததை மறைத்து, ரூ. 8.84 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் அண்ணாநகா் குட்ஷெட் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் சரவணபாபு (41). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது தந்தை சண்முகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இதன் பிறகு, ஓய்வூதியம் பெற்று வந்த இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு, மே மாதம் உயிரிழந்தாா். இதுகுறித்து ஓய்வூதிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், இவரது மகன் சரவணபாபு கடந்த 28 மாதங்களாக ஓய்வூதியம் பெற்று வந்தாா்.
இதுகுறித்து அறிந்த மாவட்டக் கருவூல அலுவலா் சேஷன் தலைமையிலான அதிகாரிகள் சரவணபாபுவிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், தவறை ஒப்புக்கொண்ட அவா், ரூ. 8.84 லட்சத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாகத் தெரிவித்தாா். ஆனால், ரூ. 30 ஆயிரம் மட்டுமே செலுத்திய நிலையில், மீதித் தொகையைச் செலுத்தாமல் தலைமறைவானாா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷிடம் மாவட்டக் கருவூல அலுவலா் சேஷன் புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை அமைத்து போலீஸாா் சரவணபாபுவைத் தேடி வந்தனா். ராமநாதபுரம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.