திமுக செயற்குழுவில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம்!
அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதைக் கண்டித்து திமுக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் - அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய சபையில் எதிரொலித்து- இரவு பகலாக பாடுபட்டு - உலக அரங்கில் இந்திய ஜனநாயகம் ஒளிரும் வகையில் - வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதையும் படிக்க: கவிழ்ந்த ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதி விபத்து! ஒருவர் பலி!
இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் திருக்கோவிலான நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சரே இப்படி அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசி அருவருக்கத்தக்க அநாகரீக அரசியலை அரங்கேற்றியிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள மீளாத் தலைகுனிவு. எவரும் ஏற்கமுடியாத - எந்தக் காலத்திலும் நடைபெற்றிடாத ஒரு உள்துறை அமைச்சரின் பேச்சை திசை திருப்ப நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்கள் அதை விட கேலிக்கூத்தானது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.