``இசைமுரசு நாகூர் ஹனிபா என்றாலே..." - அரசாணை வெளியிட்டு பகிர்ந்துகொண்ட முதல்வர்
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட தி.மு.க மத்தியில் பிரபலமாக அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களுடைய பேச்சுகள் முக்கியக் காரணமென்றால், மற்றொரு பக்கம் மக்களை ஒன்று திரட்ட முக்கியக் கருவிகளில் ஒருவராக இருந்தவர் இஸ்மாயில் முகம்மது ஹனிபா.
மக்களால் `நாகூர் ஹனிபா என்று அழைக்கப்படுகிறார். இஸ்லாமியப் பாடல்கள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சி சார்ந்தப் பாடல்கள், மதச்சார்பின்மையை, ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்கள் மூலம் வெகுஜன மக்களையும் கவர்ந்தவர். ‘எல்லோரும் கொண்டாடுவோம்...', 'உன் மதமா என் மதமா ஆண்டவன் என்ன மதம்...’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்களிடம் உரையாடிக்கொண்டுதான் இருக்கிறது.
நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய நாகூர் ஹனிபா 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மறைந்தார். இந்த நிலையில், நாகூர் இ.எம்.ஹனிபாவின் கலைப் பங்களிப்பை போற்றி பெருமை சேர்க்கும் வகையில், நாகப்பட்டினம் நகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாகூர் தைக்கால் தெருவிற்கு ‘இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா தெரு’ என்றும், சில்லடி கடற்கரைக்கு செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கு ‘இசை முரசு நாகூர் இ.எம்.ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா’ என்றும் பெயரிட்டு அழைக்க முதல்வர் ஸ்டாலின் அரசாணையிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``இசைமுரசு நாகூர் ஹனிபா என்றாலே - "அழைக்கின்றார் அண்ணா" "ஓடிவருகிறான் உதயசூரியன்" - "கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" முதலான பாடல்கள்தான் நம் நெஞ்சில் ஒலிக்கும்! அவரது நூற்றாண்டைச் சிறப்பிக்க - நாகை நகராட்சியில் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா தெரு” என்றும், சில்லடி கடற்கரைக்குச் செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்கா “இசை முரசு நாகூர் E.M. ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா” என்றும் பெயர் சூட்டியுள்ளோம்!
நாகூர்ஹனிபா100-ல் அவரது வாழ்வையும் தொண்டையும் போற்றுவது நம் கடமை!" எனப் பதிவிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, நாகூர் ஹனிபாவின் குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கின்றனர்.