Viduthalai 2: `நீங்க படத்துல பாக்குறது வெறும் 20 சதவிகித காட்சிகள்தான்'- `விடுதலை' பால ஹாசன் பேட்டி
அதிகார வர்கத்திற்கு எதிரான அரசியலை அழுத்தமாகப் பேசும் திரைப்படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது `விடுதலை பாகம் 2'.
இத்திரைப்படத்தில் பெருமாள் வாத்தியாரின் உண்மை நிலையை கான்ஸ்டபிள்களான குமரேசனும், பாலவும் புரிந்துக் கொள்வார்கள். இதில் அதிகாரத்தின் குரல் கண்டு அஞ்சி வேறு ஒரு நிலைக்கு நகர்ந்துவிடுவார் பாலா. அந்தக் கதாபாத்திரத்தில் அவ்வளவு நேர்த்தியாக நடித்து வாவ் சொல்ல வைத்திருக்கிறார் நடிகர் பாலா. `வடசென்னை', `அசுரன்' என இயக்குநர் வெற்றி மாறனோடு பயணித்தவர் `விடுதலை; இரண்டு பாகங்களிலும் கவனம் ஈர்த்திருக்கிறார். ரிலீஸ் பிஸியில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.
நம்மிடையே பேச தொடங்கிய பாலா, `` படம் வெளியானதுல இருந்து ஃப்ரண்ட்ஸ் கால் பண்ணி வாழ்த்துறாங்க. சமூக வலைதளப் பக்கங்களிலும் பாராட்டுறாங்க. இந்த விஷயங்களெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை தருது. `விடுதலை' முதல் பாகத்துல என்னை அதிகளவுல பார்க்க முடியலனு சொன்னாங்க. ஆனால், இந்த காட்சிகளெல்லாம் இருக்குதுன்னு எனக்குத் தெரியும். `விடுதலை' திரைப்படத்துல நடிச்சது என் வாழ்க்கைல முக்கியமான விஷயமாக பார்க்கிறேன். விஜய் சேதுபதி அண்ணன், சூரி அண்ணன், வெற்றி மாறன் சார்னு எல்லோர்கூடவும் இருந்த நாட்களெல்லாம் என் வாழ்க்கைல சிறப்பான ஒண்ணு.
வெற்றி மாறன் சார் இயக்கத்துல முதன் முதலாக `வட சென்னை' திரைப்படத்துலதான் நடிச்சேன். அந்தத் திரைப்படத்துல நான் இருக்கிறதே தெரியாது. ஆனால், 80 நாட்கள்கிட்ட எனக்கு ஷூட் நடந்தது. அப்போ அவர்கிட்ட பேசுறதுக்கு கொஞ்சம் பயம் இருக்கும். அதன் பிறகு `அசுரன்'ல ஒரு முழு கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் படத்துக்கு முக்கியமானதும்கூட. `அசுரன்' சமயத்துல இருந்து வெற்றி மாறன் சார்கூட அதிகமாக பேசுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. இப்போ `விடுதலை' ஷூட்டிங் நடந்த காட்டுல டவர் சுத்தமாக இருக்காது. எல்லோரிடமும் நேர்லதான் பேசியாகணும். அதுமட்டுமில்ல, இந்த படத்துக்காக நான் 160 ஷூட்டிங் போனேன். அதிகமான நாட்கள் இருந்தது, சார்கிட்ட அதிகமான விஷயங்கள் நட்பாகப் பேச முடிஞ்சது.
வெற்றி சார்கிட்ட ஃபிட்னெஸ், கிரிக்கெட்னு பல விஷயங்கள் பற்றிப் பேசுவேன். சொல்லப்போனால், நானும் 'வட சென்னை' திரைப்படத்தின் ரசிகனாக எப்போ பேசினாலும் அந்த படத்தைப் பற்றி கேட்பேன். அவரும் ஜாலியாக `யார்ரா இவன்... வடசென்னை வடசென்னைனு கேட்டுட்டே இருக்கான்'னு சொல்வார். ஆனால், வடசென்னை பத்திப் பேசத் தொடங்கினா குறைந்தபட்சம் அரை மணி நேரம் அவர் பேசுவாரு." என்றவர் தன்னுடைய கதாபாத்திரம் தொடர்பாக பேசத் தொடங்கினார். அவர், `` `அதிகாரத்துல இருக்கிறவங்க சொல்றதைக் கீழ இருக்கிறவங்க செஞ்சுதான் ஆகணும். அப்படி இல்லைனா குமரேசனோட நிலைமைதான்'ங்கிற விஷயத்தைப் புரிஞ்சு நடக்குறதுதான் என்னுடைய பாலா கதாபாத்திரம்.
இதன் பிறகு வாத்தியார்... முதல்ல நாங்க வேற பகுதியில ஷூட் பண்ணுவோம். வாத்தியாருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு வேற இடத்துல நடக்கும். இறுதியாக வர்ற காடு காட்சியிலதான் வாத்தியார் கதாபாத்திரத்தை என்னால முழுமையாக புரிஞ்சுக்க முடிஞ்சது. குமரேசன் கதாபாத்திரம் ரொம்ப அப்பாவியான கதாபாத்திரம். அப்படியே சூரி அண்ணன் எப்படி இருப்பாரோ... அதே மாதிரிதான் அந்தக் கதாபாத்திரமும் படத்துல இருக்கும்." என்றார்.
படப்பிடிப்பு தள அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர், `` மான்டேஜஸ்லாம் எடுக்கும்போது ஷூட்டிங் ஸ்பாட் ஜாலியாகதான் இருக்கும். எதாவது ஆக்ஷன் சீன் எடுத்தாங்கனா களமே பரபரப்பாகிடும். அந்த ஆக்ஷன் காட்சிகளை சிங்கிள் ஷாட்ல வெற்றி சார் எடுப்பாரு. ஒருத்தர் சொதப்பினாலும் முதல்ல இருந்து பண்ண வேண்டியதாக இருக்கும். அப்படியான காட்சிகள்ல நடிக்கும்போது உண்மையாகவே ஆக்ஷன் களத்துல இருக்கிற மாதிரியே இருக்கும். படப்பிடிப்பு நடத்தின மலைப் பகுதிகளிலும் பல சவால்கள் இருக்கும். நாங்க தங்கியிருக்கிற ரூம்ல இருந்து மலையடிவாரத்திற்கு போகுறதுக்கு 45 நிமிடம் ஆகும். அங்கிருந்து மலை மேல வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகிடும். இப்படி பயணத்திலேயே 4 மணி நேரம் போயிடும்.
முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சி ரொம்ப சவலாக இருந்துச்சு. நீங்க பார்க்கிற அந்த க்ளைமேக்ஸ் காட்சியை மட்டும் 15 நாள் ஷூட் பண்ணினாங்க." எனக் கூறியதும் விஜய் சேதுபதி , சூரி உடனான தருணங்களை நினைவு கூர்ந்தார். அவர், `` ஸ்டார்ஸ்கிட்ட பேசுவோம். ஆனால் சில ஸ்டார் நடிகர்கள் ஒரு கம்ஃபோர்ட் இடத்தைக் கொடுப்பாங்க.
அந்த மாதிரி விஜய் சேதுபதி அண்ணன் கொடுப்பார். 'விடுதலை 1' ஷூட்டிங் நடக்கும்போது ஜீப்ல போயிட்டு இருந்த சமயத்துல அவர்கிட்ட `உங்ககிட்ட நயன்தாரா பிடிக்குமா? சமந்தா பிடிக்குமா'னு கேட்டேன். அவரும் அதுக்கு ஒரு பதில் சொன்னாரு. இந்த மாதிரி ஜாலியாகப் பேசுறதுக்கு ஒரு இடத்தைக் கொடுப்பாரு. அதே மாதிரிதான் சூரி அண்ணனும். சொல்லப்போனால், ஷாட் ரோலிங்ல இருக்கும்போது பயங்கரமா ஊக்கம் கொடுப்பாரு." என்றவர், `` நீங்க படத்துல பார்த்த என்னுடைய காட்சிகளெல்லாம் 20 சதவிகிதம்தான். இன்னும் பல காட்சிகள் இருக்கு.
இப்போ சூரி அண்ணனும் எவ்வளவு நடிச்சிருக்காரோ, அதைவிட 70 சதவிகிதம் அதிகமான காட்சிகள் இருக்கும். சேது அண்ணனுக்கும் அதே மாதிரிதான் இருக்கும். " என உரையை முடிக்கச் சென்றவரிடம் அவரின் அடுத்தடுத்த படங்கள் தொடர்பான அப்டேட்ஸையும் கேட்டோம்.`` அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்துல உருவாகுற திரைப்படத்துல நடிக்கிறேன். `பேட்டைக்காளி' ராஜ்குமார் சார் டைரக்ஷன்ல ஒரு படம், எஸ்.கே அண்ணன்- முருகதாஸ் சார் படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன்." என உற்சாகத்தோடு கூறினார்.