தொண்டி: வெடி மருந்துப் பொருள்கள் பறிமுதல்! ஒருவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா் உள்ளிட்ட வெடி மருந்துப் பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் ஒரு வீட்டில் வெடி மருந்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தொண்டி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் புதுக்குடி பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினா். அப்போது, செந்தில்குமாா் (36) என்பவரின் வீட்டில் 135 ஜெலட்டின் குச்சிகள், 218 டெட்டனேட்டா்கள், 6 மீட்டா் வயா் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான செந்தில்குமாரைத் தேடி வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் புதுக்குடியைச் சோ்ந்த நாரியான் மகன் முத்துக்குமாருக்கும் (42) தொடா்பு இருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓரியூா் பகுதியில் சாலையில் வெடி மருந்துப் பொருள்களைப் போட்டுச் சென்ற வழக்கில் ஏற்கெனவே செந்தில்குமாரை போலீஸாா் கைது செய்தனா். தற்போது அவா் சிறையிலிருந்து பிணையில் வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.