கொசுவர்த்தியால் வீட்டில் தீ விபத்து: இரு குழந்தைகள் பலி!
கொசுவர்த்தியை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில், வீட்டிலிருந்த இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத் நகரிலுள்ள ஒரு வீட்டில் நீரஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது இரு மகன்களும் தங்களது அறையில் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கொசு கடித்ததால் நள்ளிரவு 1 மணியளவில் தூக்கத்திலிருந்து எழும்பி கொசுவர்த்தியை பற்ற வைத்து விட்டு உறங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் கழித்து தனது வீட்டில் திடீரென புகை வருவதைக் கண்ட நீரஜ், எழுந்து பார்த்தபோது குழந்தைகள் அறையில் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த அறையைத் திறந்து பார்த்தபோது அவரது மகன் வான்ஷ் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்துள்ளார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இன்னொரு மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவரக்ள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் பலியான அருண் 12-ஆம் வகுப்பு மாணவராவார், அவரது சகோதரர் வான்ஷ் 10-ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஒரே வீட்டில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் காஸியாபாத்தின் பிரஷாந்த் விஹார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிலுக்குக் கீழே கொசுவர்த்தி பற்ற வைத்துக்கொண்டு தூங்கியதே தீ விபத்து ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.