பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!
தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) - பேராசிரியர் தகுதித் தேர்வு (நெட்)நடத்துவதற்கான முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழர்களின் பண்பாடு நாட்டின் மற்ற மாநிலங்களின் பண்பாட்டை விட உயர்ந்ததும், சிறப்பு வாய்ந்ததுமாக இருக்கின்ற காரணத்தால், தமிழ்நாட்டின் பண்பாடுகளுக்கு பல வகையில் எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய பாஜக அரசு.
அதற்கு, தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க ஏறுதழுவல் விளையாட்டிற்கு இடப்பட்ட இடைக்காலத் தடை இன்றியமையாத எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைந்த நிதி, மதச்சார்பின்மையை தாங்கிப்பிடிக்கும் தலைமைகளுக்கு மத சாயம் என தமிழ்நாட்டின் சமூகநீதி பாதையை மாற்ற மத்திய பாஜக அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும் ஏராளம்.
இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் நாளில், தேசிய அளவிலான யுஜிசி - நெட் தேர்வு நடைபெறும் என அறிவித்து, தனது வஞ்சிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளது மத்திய அரசு.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க |வலிமையுடன் உள்ளது திமுக; 2026-ல் வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்
அந்த கடிதத்தில், சமீபத்தில்தான், பொங்கல் நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தேசிய அளவிலான சிஏ தேர்வுகளின் தேதியை மாற்றக் கோரி எதிர்குரல் எழுப்பி அது மாற்றப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வான நெட் தேர்வை ஜனவரி 3 முதல் ஜனவரி 16 வரை நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பொங்கல் பண்டிகை மட்டுமல்ல; இது தமிழரின் பெருமை மற்றும் அடையாளத்தின் கொண்டாட்டமாகும். இது வெறும் அலட்சியம் அல்ல. தமிழ்நாட்டின் பண்பாடு - கலாசாரம் - உணர்வுகள் என எதையும் மதிக்காமல், மத்திய ஆதிக்கத்தைத் திணித்து வரும் பாஜக அரசு உடனடியாக அதன் தமிழர் விரோதச் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தமிழ் மக்களின் அடையாளத் திருநாளை கொண்டாட இடையூறாக அமைந்துள்ளது. குறிப்பாக மக்களின் பண்பாட்டு உரிமையை சிதைக்கும் விதமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், எந்த ஒரு மாணவரும் தங்கள் கல்விக்கும் பாரம்பரியத்துக்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், ஜனவரி 15, 16 நாள்களில் நடைபெறுவதாக அறிவித்த தேர்வுகளை உடனடியாக நாள்மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.