40 ஆண்டுகளுக்கு மேல் சிறை, உலகின் தனிமையான மனிதக்குரங்கு!
தாய்லாந்து நாட்டிலுள்ள தனியார் வனவிலங்கு காட்சிசாலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு மனிதக்குரங்கு தனிமையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்காக்கிலுள்ள ஒரு வணிக வளாகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது தளங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தனியாருக்குச் சொந்தமான பட்டா எனும் வனவிலங்கு பூங்கா உள்ளது.
அங்குதான், உலகின் தனிமையான மனிதக்குரங்கு என்று வர்ணிக்கப்படும் அந்த விலங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1983 ஆம் ஆண்டு வினய் செர்ம்சிரிமொங்கோல் என்பவர் நிறுவிய இந்த காட்சிசாலையை தற்போது அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு வயது குட்டியாக ஜெர்மனி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட புவா நொய் அல்லது லிட்டில் லோடஸ் என்றழைக்கப்படும் இந்த பெண் மனிதக்குரங்கு கடந்த 40 ஆண்டுகளாக அந்த வணிகவளாகத்தின் மேல்தளத்தில் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதையும் படிக்க: தென் கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள் வெற்றி!
இது அங்குள்ள பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவதால், அங்கிருக்கும் கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கின்றது.
இதனால், அதன் உரிமையாளர்கள் புவா நொய்க்கு பல ஆண்டுகளாக அந்த இரும்புக் கூண்டையே நிரந்தரமாக்கியுள்ளனர்.
இருப்பினும், அந்த மனிதக்குரங்கை விடுவிக்க பல்வேறு அமைப்புகளும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் அதற்கு அதன் உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் கூறுகையில், புவா நொய்-ஐ மீட்டு விடுவிப்பதற்காக அதன் ஆதரவாளர்கள் பலர் நன்கொடை சேகரித்து அதன் உரிமையாளர்களிடம் முறையிட்டாலும் அவர்கள் அதை விற்க மறுப்பதாகவும், அப்படியே ஒப்புக்கொண்டாலும் மிக அதிகமான தொகையாக சுமார் ரூ.7.4 கோடி அதற்கு ஈடாக கேட்பதாகவும் அவர் கூறினார்.
தனிமையில் வாடும் இந்த மனிதக்குரங்கை மீட்டு அதனை விடுதலை செய்வதற்காக விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீட்டா கடந்த 12 வருடங்களாக போராடி வருகின்றது.
ஒரு மனிதக்குரங்கின் சராசரி ஆயுள் காலம் 35-40 ஆண்டுகள் என்பதினால் எங்கு தனது விடுதலைக்கு முன்னரே புவா நொய் மரணமடைந்து விடுமோ என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பட்டா வனவிலங்கு காட்சி சாலையில் புவானொய் போன்று 200க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் சுகாதாரமற்ற முறையில் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.