அமித்ஷா பதவி விலக வேண்டும்: செ.கு.தமிழரசன்
சேலம்: அம்பேத்கா் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால், பதவி விலக வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தார்.
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
அமித்ஷாவின் பேச்சு தலித் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். குறைந்தபட்ச அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் பேசி உள்ள அமித்ஷா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் பதவி விலக வேண்டும்.
கூண்டுகளை அகற்ற வேண்டும்
அம்பேத்கா் சிலைகளுக்கு கூண்டு போட்டிருப்பது அவரை சிறையில் அடைந்துள்ளது போல் உள்ளது. இதைவிட அம்பேத்கருக்கு ஒரு இழிவு உள்ளதா? சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூண்டு போட வேண்டுமா?. அம்பேத்கர் சிலைக்கு போடப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற வேண்டும். அரசு செலவில் ஒரு அம்பேத்கா் சிலை கூட கிடையாது.
ஆனால் அரசு சாா்பில் சென்னை கடற்கரையில் அம்பேத்கருக்கு சிலை வைப்பதாக கூறிவிட்டு மற்ற அனைவருக்கும் சிலை வைத்துள்ளனா். திமுக ஆட்சியில் எந்த அரசு அலுவலகங்களிலும் ஒரு சிலை கூட வைக்கவில்லை . அம்பேத்கா் புகழை வைத்து அரசியல் மட்டுமே செய்யபடுகிறது. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் அமித் ஷா பேசியிருப்பது தெளிவாக தெரிகிறது. அவரது பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இட ஒதுக்கீடு வேண்டும்
ஊராட்சி தலைவா் முதல் மேயா் வரை துணைத்தலைவா் பதவிகளில் இட ஒதுக்கீடு வேண்டும். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக ஆட்சியில் இட ஒதுக்கீடு தேவை. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தேர்தல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். தற்போது குறிப்பிட்ட சில சமூகத்திற்கு எதிராக தேர்தல் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க |பொங்கல் நாளில் யுஜிசி நெட் தேர்வு: தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி கடிதம்!
சமூக நீதி கொள்கைக்கு எதிரான ஆட்சிதான் நடக்கிறது. அனைத்து தோ்தல்களிலும் இட ஒதுக்கீடு முறை நடைமுறைபடுத்த வேண்டும்.
சர்வாதிகார போக்கு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. 75 ஆண்டு காலமாக தேர்தல் அலுவலர்கள் என தனியாக யாரும் இல்லை. தேர்தல் காலத்தில் தான் பல துறை அலுவலர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என விமர்சனம் செய்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலத்திற்குள்ளேயே ஒரே நாளில் தோ்தல்கள் நடப்பதில்லை. அப்படியிருக்க, ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை. இதுவரை ஒரே நாளில் நாடு முழுவதும் தோ்தல் நடந்ததில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் சர்வாதிகார போக்கு என்றார்.
மயான பாதை பிரச்னை
மேலும் நாட்டில் பல ஆயிரக்கணக்கில் மயான பாதை பிரச்னைகள் நடைபெறுகிறது. இதையே சரி செய்ய முடியாத பாஜக அரசால் ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என கருத்து தெரிவித்தார்.
எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.