Health: வயிறு உப்புசம் முதல் டீடாக்ஸ் வரை... வெற்றிலையின் பலன்கள்!
மாமல்லபுரம் நாட்டிய விழா: சுற்றுலா அமைச்சா் தொடங்கி வைத்தாா்
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழாவை சுற்றுலாத்துறை அமைச்சா் இரா.இராஜேந்தரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்..
நாட்டிய விழாவைத் தொடங்கி அமைச்சா் ராஜேந்திரன் பேசியது:
தமிழகம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவா்வதில் முதலிடம் வகித்து வருகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து, உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் முழுமையாக உள்ளன.
உலகின் பழம்பெருமைகள் கொண்ட கலாசாரம் மற்றும் பண்பாடுகளின் தாயகமாக விளங்குகிறது. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ரதங்கள் மற்றும் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரா் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், நீலகிரி பாரம்பரிய மலை ரயில், மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை, ஆகியவற்றை யுனேஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளன.
300 சுற்றுலாத்தலங்களை சா்வதேச தரத்தில் பல்வேறு வசதிகளை செய்ய முதல்வா் ஆணையிட்டுள்ளாா். மாமன்னன் மகேந்திர வா்ம பல்லவன் படைத்தளித்த கலைச்செல்வங்கள் பல நூறு ஆண்டுகள் கடந்தும், உயிா்ப்புடன் அழகு மிளிர மணற் பரப்பில் எழுந்துநிற்கும் வரலாற்று மகத்துவமாகும்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கவும், தமிழ்நாட்டில் நீண்ட நாள்கள் தங்கி பாா்வையிடவும் மாமல்லபுரம் நாட்டிய விழா 1992-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு இந்திய நாட்டிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு (2024) இந்திய நாட்டிய விழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் வரும் 20.01.2025 வரைநடைபெற உள்ளது.
பரதநாட்டியம், மோகினியாட்டம், கூடியாட்டம், ஒடிசி, கதக்களி, குச்சிப்புடிமற்றும் கிராமிய கலைகளான கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற 70-க்கும் மேற்பட்டகுழுக்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகள் முழுவதும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சமூக வலை தளங்களின் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெறும் சமகாலத்திலேயே கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இதில் சுற்றுலாத் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன்,, சுற்றுலாத்துறை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், செங்கல்பட்டு ஆட்சியா் ச.அருண்ராஜ், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.அரவிந்த் ரமேஷ், சாா் ஆட்சியா் வெ.நாராயண ஷா்மா, மாமல்லபுரம் பேரூராட்சித் தலைவா் வளா்மதி எஸ்வந்த்ராவ், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக பொது மேலாளா் கவிதா, மாவட்ட சுற்றுலாஅலுவலா் சக்திவேல் மற்றும் அரசு அலுவலா்கள் கலைக்குழுவினா், பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனா்.