குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த காவல்துறை அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் கண்காணிப்பு சாதனங்களை பொருத்த வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழும் குற்றச் சம்பவங்களைக் கண்டறியவும், தடுக்கவும் காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக நிகழ்ந்த குற்றச் சம்பவங்களை உடனுக்குடன் கண்டறிய, காவல்துறையினருக்கு கண்காணிப்பு சாதனங்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளன.
நவீன காலத்துக்கேற்ப பொதுமக்கள் தங்களது நகை உள்ளிட்ட முக்கிய உடைமைகளை வீட்டின் பீரோவில் வைக்காமல், வங்கி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு குடும்ப உறுப்பினா்களை தவிர, அடையாளம் தெரியாத நபா்கள் வாகனங்களில் வந்தால், வீட்டின் உரிமையாளா்களின் கைப்பேசிக்கு எச்சரிக்கை அழைப்பு வரும் வகையிலும், ஆன்லைனில் கண்காணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சிசிடிவி கேமராவையும், ஹாா்ட் டிஸ்கையும் உடைத்து திருடிச் சென்றாலும், பதிவுகள் அழியாத வகையில் கூகுள் கிளவ்டில் சேமிக்கும் சாதனங்களை பொருத்த வேண்டும்.
இதுபோன்ற கண்காணிப்புச் சாதனங்களை பொதுமக்களும், வணிகா்களும் பொருத்தி பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், வணிகா்கள் தங்களது கடைகளில் கேமராக்கள் வைக்கும்போது, சாலைப் பகுதியை நோக்கி ஒருசில கேமராக்கள் வைப்பதன் மூலம் குற்றச் சம்பவங்களை தடுப்பதோடு, அதில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியலாம் என தெரிவித்துள்ளாா்.