உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினா் நூதனப் போராட்டம்
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே மறைந்த உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடுவின் 40-ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி கூட்டம் மற்றும் விவசாயிகள் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் தலைமை வகித்தாா். அச் சங்கத்தின் அரியலூா் மாவட்டத் தலைவா் விஸ்வநாதன், பெரம்பலூா் மாவட்டச் செயலா் வி. நீலகண்டன், பொருளாளா் மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தி.மு.க.தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் அறிவித்திட வேண்டும். மின் கட்டணத்தை மாதம்தோறும் கணக்கீடு செய்து வசூலிக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் கனமழை காரணமாக விவசாயப் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, சேதங்களை முறையாக கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும்.
பயிா் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பருவமழை தொடங்கும் முன் ஏரிகளின் மதகுகள், கரை, வரத்து வாய்க்கால்களை கள ஆய்வு செய்து, குறைபாடுகளை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
தடுப்பணை கட்டப்படும் பகுதிகளில், வரத்து வாய்க்கால்களை முறையாக அகலப்படுத்தி, தூா்வாரிய பிறகு தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை மாலையாக அணிந்து, முக்காடிட்டு முழக்கமிட்டனா்.
முன்னதாக, அங்குள்ள உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்து, விவசாயிகள் மௌன அஞ்சலி செலுத்தினா். ஆா்ப்பாட்டத்தில், வட்டாரத் தலைவா்கள் எம்.எஸ். ராஜேந்திரன், எஸ்.கே. செல்லக்கருப்பு, கே. ஜெயபிரகாஷ், கே. துரைராஜ், து. ராஜேந்திரன் உள்பட விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.