மதுரையில் களைகட்டிய மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா! | Pho...
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.22 லட்சம் மோசடி: 2 போ் கைது
பெரம்பலூா் அருகே அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 22 லட்சம் மோசடி செய்த 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், அயிலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மனைவி பானுமதி (41). திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வாழையூா் கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் தாமோதரன் (40), இவரது அண்ணன் ஸ்ரீதா் (43), தாமோதரன் மனைவி நிஷாந்தி (29), பெரம்பலூா் மாவட்டம், அயிலூா் கிராமத்தைச் சோ்ந்த ரெங்கநாதன் மனைவி காந்தலெட்சுமி (56) ஆகிய 4 பேரும் பானுமதியை அணுகி, கொடுக்கும் பணத்துக்கு 25 சதவீதம் வட்டி மாதம்தோறும் தருவதாக தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, மேற்கண்ட 4 பேரும் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 தவணைகளாக, பானுமதியிடமிருந்து ரூ. 22 லட்சத்தை பெற்றுக்கொண்டு, அதற்கு ஆதாரமாக 3 முத்திரைத் தாள்களில் கடன் ஒப்பந்தம் செய்து கையொப்பமிட்டு வழங்கியுள்ளனா்.
தொடா்ந்து, கொடுத்த பணத்துக்கு பானுமதி வட்டி கேட்டதற்கு ரூ. 3 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 7 லட்சம் என தனியாா் வங்கிகளின் காசோலைகளை கொடுத்துள்ளனா். இதையடுத்து, பெறப்பட்ட காசோலைகள் அனைத்தும் ஆண்டுக் கணக்கில் பின் தேதியிட்டு கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது பானுமதிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் பானுமதி கடந்த நவ. 27 ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், ஸ்ரீதா் மற்றும் காந்தலெட்சுமி ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய தாமோதரன், இவரது மனைவி நிஷாந்தி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.