சன்னி லியோனுக்கு ரூ.1000 மகளிர் உதவித் தொகையா?
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உதவித் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், சன்னி லியோன் பெயரிலும் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, மஹ்தாரி வந்தன் என்ற மகளிர் உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உதவித் தொகை பெறும் பெண்களின் பட்டியலில், சன்னி லியோன் பெயர் இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
அதில், சத்தீஸ்கர் மாநிலம் பாஸ்தர் மாவட்டம் தலுர் கிராமத்தைச் சேர்ந்த விரேந்திர ஜோஷி என்ற இளைஞரின் மனைவியின் ஆதார் எண், வங்கிக் கணக்கை சன்னி லியோன் பெயரில் விண்ணப்பித்து, மகளிர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்து, மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இதில் எனக்குத் தொடர்பில்லை என்றும், யாரோ தங்களது ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதோடு, இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களை இணைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளும், இவ்வாறு பெண்களின் விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.