செய்திகள் :

புத்தக வாசிப்பே விடுதலை - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை| பகுதி 9

post image
புத்தகக் கடை திறப்பதற்கு மிஷாவ்வின் மனைவி வில்லி ஆன் ஆர்வம் காட்டவில்லை.

அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்குப் பின், கறுப்பர்களுக்கு வேலை கிடைப்பதே அரிதாக இருக்கும் சூழலில், வாசிப்புப் பழக்கமே இல்லாத கறுப்பர்களை நம்பி புத்தகக் கடை திறக்க யாராவது விரும்புவார்களா? அதனால், மனைவி வில்லியின் நடவடிக்கைகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. “வரலாற்றில் மத வழிபாடும் வழிபாட்டுத் தலங்களும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக் களங்களாக இருந்துள்ளதுதானே…”

லூயிஸ் மிஷாவ்

என்னுடைய கருதுகோளை ஒப்புக்கொள்ளும் விதத்தில் லூயிஸ் மிஷாவ் தலையசைத்தார். “அண்ணனுடன் கொஞ்ச நாள் இருந்த நிலையில் மிஷாவ் பக்திமானாக மாறிட்டான் போலன்னு நீங்க நினைக்கலாம் இவா. மதம் பற்றிய என்னுடைய பார்வையில மாற்றம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் மதம் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும், ஒருவர் எந்த நோக்கத்திற்காக மதத்தை பயன்படுத்துகிறார், மதத்தின் மூலமாக எதை எதிர்பார்க்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

“ஒன்றுகூடல் வழியாக மக்களை அணி திரட்டுவதற்கான மிகச் சிறந்த சாதனம் தேவாலயம். தேவாலயங்களில் நிகழ்த்தப்படும் பிரார்த்தனைகள், ஆன்மிகக் கூட்டங்களில் வானத்தில் உள்ளதைப் பற்றி மட்டுமே கறுப்பர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில் வெள்ளையர்கள் விடாப்பிடியாக இருந்தனர். அந்தக்  காலக்கட்டத்தில், நாட் டர்னர் (Nat Turner), ஃபிரடெரிக் டக்ளஸ் போன்றவர்கள் தேவாலயம் மூலமாகத்தான் கறுப்பர்களை அணிதிரட்டினர்.

“தேவ குமாரனுடைய வார்த்தைகளை வாசிக்க கறுப்பர்கள் கற்றுக்கொள்வதை, எஜமானர்களான வெள்ளையர்கள் அறிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென டக்ளஸ் எச்சரித்திருக்கிறார். ‘சப்பாத்’ என்று சொல்லக்கூடிய ஓய்வு நாளான சனிக்கிழமைகளில் மல்யுத்தம், குத்துச்சண்டை, மது அருந்துதல் என நாம் உல்லாசமாக இருப்பதை மட்டுமே நம்முடைய எஜமானர்கள் பார்க்க வேண்டும். மாறாக ஒழுக்கமாக, அறிவார்ந்த முறையில் பொறுப்பான மனிதர்களாக நாம் மாறுவதை வெள்ளையர்கள் பார்க்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். டக்ளஸ், மதத்திற்கு எதிரானவர் கிடையாது. ஆனால் மதத்தை தவறாகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்தார். அவர் கூர்மையான ஆயுதம் போன்றவர்.”

“சரி… கடையை எங்கு, எப்போது, எப்படி தொடங்கினீர்கள்? அந்த விவரங்களைச் சொல்லுங்க…” 

“ரைட்டு… அத சொல்றதுக்கு முன்னாடி, கடையின் பெயருக்கும் அண்ணன் லைட்ஃபுட் அவர்களுக்கும் தொடர்பு இருக்குங்கிறத மொதல்லயே சொல்லிடுறேன்…” ஒரு புதிரோடு கடை திறந்த வரலாற்றை விளக்கத் தொடங்கினார்.

“நான் ஓரளவுக்கு புரிந்து கொள்கிறேன். தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை (National Memorial African Bookstore) என பெயர் வைப்பதற்குக் காரணம், உங்கள் அண்ணனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரை அப்படியே புத்தகக் கடைக்கு வைத்து விட்டீர்கள், அப்படித்தானே மிஷாவ்…”

“கரெக்ட்… ‘அமெரிக்க கறுப்பர்கள் முன்னேற்ற தேசிய நினைவகம்’ (National Memorial to the Progress of the Colored Race in America) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், ஹார்லெம் நகர அலுவலகத்தை புத்தகக் கடை நடத்திக் கொள்ள அண்ணன் அனுமதி கொடுத்தாரு. அதனால, அந்த பெயரையே புத்தக் கடைக்கும் வச்சிட்டேன். தொடக்கத்தில் அவரே புத்தகக் கடைக்கான வாடகையை கொடுத்து வந்தார். என்னை விட்டுவிடாமல் இருக்க அண்ணன் இந்த உதவியைச் செய்தார். இதெல்லாம் சரிதான். 

“ஆனால் புத்தகங்களை வாங்கி வைக்க முதல் வேண்டுமே… அதுக்கு என்ன செய்யுறது? முதலுக்கு எங்க போவேன்? யாரிடம் கேட்பேன்? பேங்க்ல போய் கடன் கேட்டேன். அதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியல. கறுப்பர்களைப் பற்றி, கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்யப் போகிறேன், அதற்கு முதலீடாக ஐந்நூறு டாலர்கள் கடன் வேண்டுமெனச் சொல்லவும், மேலும் கீழும் என்னைப் பார்த்த அந்த வங்கி அதிகாரி சிரித்துவிட்டார்.

“என்னுடைய தோற்றத்தை விட, என்னுடைய சிந்தனை மிக மோசமாக இருப்பதாக அவர் நினைத்திருக்க வேண்டும். அந்தச் சிரிப்புக்கு அதுதான் அர்த்தம். ஒரு புத்தகக் கடை நீக்ரோக்களின் வாழ்க்கையை மாற்றி விடும் என்றால் யார்தான் நம்புவார்கள்? ஆறு மாதங்களுக்கு கடை நீடிக்குமா? என்னுடைய இந்தத் திட்டத்தை நம்பி பேங்குல கடன் தருவாங்களா? ஒரு ஹோட்டல் வைப்பதாகச் சொன்னால்கூட உடனே கடன் கிடைக்கும். கறுப்பர்கள் நல்லா சாப்புடுறாங்கல்ல… அவர் சிரித்ததில் எனக்கு வருத்தமில்லை. கறுப்பர்கள் அப்படித்தானே இருந்தார்கள். ஆனால், அந்த நிலையை மாற்றத்தானே நான் புத்தகக் கடையை திறக்க முடிவெடுத்தேன்.”

எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் இழிநிலையை மாற்றத் தூண்டும் அக மற்றும் புறக் காரணிகளாக ஒரு புத்தகக் கடை இருந்திருக்கிறது என்பதால்தானே இந்த நேர்காணல் எடுக்கவே வந்தேன். அமெரிக்க அரசையே அச்சம் கொள்ள வைக்குமளவுக்கு வளர்ச்சியடைந்ததால், உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு கடையை மூடுவதற்கு மறைமுகமாக அழுத்தம் தந்து, இறுதியில் கடை மூடப்பட்டது. அதனால், அந்தக் கடையின் தொடக்க நாட்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தேன். “ஓஹோ… அப்ப என்ன செய்தீர்கள்? முதலீடு இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய கடையைத் தொடங்கினீர்கள்?”

“நான் ரொம்ப தெளிவாக இருந்தேன். வாசிப்பு ஒன்றே கறுப்பர்களின் நிலையை மாற்றும், மேம்படுத்தும் என்ற கருத்தில் நான் விடாப்பிடியாக இருந்ததால், என்ன கஷ்டம் வந்தாலும் புத்தகக் கடையை தொடங்கிவிடுவது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய இலக்கு தெளிவாக இருந்ததால், அந்த இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை வகுப்பதிலும் நான் சுணக்கம் காட்டவில்லை. கறுப்பர்கள் எழுதிய புத்தகங்கள் அப்போது பெரிய எண்ணிக்கையில் கிடையாதுதானே… கறுப்பர்களை பற்றிய புத்தகங்களை வெளியிட அப்போது பதிப்பாளர்கள் தயங்கினர். புக்கர் டி வாஷிங்டன் எழுதிய ‘அடிமைத்தளையிலிருந்து மேலெழுதல்’ (Up from Slavery, Booker T. Washington) என்ற புத்தகமும், ஹரியட் டப்மேன் (Harriet Tubman), சோஜோர்ன் ட்ரூத் (Sojourner Truth), மேரி மெக்லியாட் பெத்யூன் (Mary McLeod Bethune), ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver) ஆகியோர் எழுதிய புத்தகங்கள் என ஐந்து புத்தகங்களோடு, 1939-ம் ஆண்டு இறுதியில் புத்தகக் கடையைத் தொடங்கினேன்.”

அவர் பேசி முடிப்பதற்குள்ளாகவே, “வெறும் ஐந்து புத்தகங்களோடா?” வியப்பாகக் கேட்டேன். “எந்த நம்பிக்கையில் இறங்கினீர்கள்?’‘ “நான்தான் சொன்னேனே… இலக்குல தெளிவா இருந்தா, செயல் திட்டத்த ஈஸியா வகுக்கலாமுன்னு. ஐந்து புத்தகங்களோடுதான் தொடங்கினேன். கேலி, கிண்டல், ஏளனத்துக்கு ஆளாவோம் எனத் தெரியும். எனக்கு அது பிரச்னை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக புத்தகத்தை சேர்த்துவிட்டேன். ஆனால், மக்களை குறிப்பாக கறுப்பர்களை புத்தகக் கடைக்கு வரவைக்க வேண்டுமே. அதுதான் எனக்கு பெரிய சவாலா இருந்துச்சு, அதுக்கு ஒரு திட்டம் வைத்திருந்தேன்.

“கடை அமைந்திருந்த ஏழாவது அவென்யூவின் குறுக்காகச் செல்லும் 125வது வீதியின் நீண்ட நடைபாதையில் தள்ளுவண்டியில் புத்தகங்களை வைத்து கூவிக் கூவி விற்றேன். அப்போது ஆர்வம் காட்டியவர்களை கடைக்குப் போகச் சொல்வேன். இப்படியே கடையை அந்தப் பகுதியில் விளம்பரம் செய்ததோடு, கொஞ்சம் கொஞ்சம் கறுப்பர்களையும் கடையை நோக்கி இழுத்தேன். இப்போது சொல்வதற்கு எளிதாகத் தெரியலாம். ஆனால், கடையைப் பிரபலப்படுத்த ரொம்பவே சிரமப்பட்டேன்.”

“மிஷாவ் உங்களிடம் நேரடியாகக் கேட்கிறேன், அப்போது வருமானத்துக்கு என்ன செய்தீர்கள்? கடை வாடகையை வேண்டுமானால், உங்கள் அண்ணன் கொடுத்திருக்கலாம். ஆனால் அன்றாட தேவைகளுக்கு உங்களுக்கு பணம் தேவைப்பட்டிருக்கும் அல்லவா? அப்படி என்ன அந்த புத்தகக் கடையில் வியாபாரம் நடந்திருக்கப் போகிறது?”

அவர் பதில் சொல்லத் தடுமாறி நெகிழ்ந்தார்.

பக்கங்கள் புரளும்

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிர... மேலும் பார்க்க

`காகித நேசம்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 13

அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.ஆனால், மிஷாவ் தன் மனைவியின் ப... மேலும் பார்க்க

கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்... கேட்பீர்களா?! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நிசப்தமாக ஓர் அறிவுப் புரட்சி; மால்கம் X உடனான முரண் - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை| பகுதி 12

1930-களின் இறுதியில் தொடங்கப்பட்ட தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை பத்தாண்டுகளில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியைத் தொட்டது.பதிப்புத் துறையில் லூயிஸ் மிஷாவ் பேசுபொருளானதைத் தொடர்ந்து ஏராரளமான பதி... மேலும் பார்க்க

ஹென்ரிட்டா லாக்ஸ் - உயிர் நீத்து உயிர்கள் காக்கும் பெண் வள்ளல் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

பணம் சார்ந்த உளவியல் - சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க