Ooty: குளிரைச் சமாளிக்க வீட்டிற்குள் தீ மூட்டிய இளைஞர், புகையால் நேர்ந்த சோகம்; ...
பணம் சார்ந்த உளவியல் - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
புது வருட கொண்டாட்டம் இன்றைய செலவு முழுவதையும் ஹசன் ஏற்றுக்கொண்டான். கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டவர்கள், இனி வேலைத் தேடி பிரிந்து செல்ல வேண்டும் என்ற நிலையில் இன்று கடைசியாக ஒன்று சேர்ந்தார்கள்.
"பிரண்ட்ஸ் நாமெல்லாம் இன்றைக்கு சந்திப்பது போல் எல்லா ஆண்டுகளும் சந்திக்க வேண்டும்! வேலைக்கிடைத்து விட்டது என்று யாரும் வராமல் இருந்துவிடக் கூடாது" என்றான் ஹசன். அந்த ஆறுபேர் கொண்ட குழுவில் ஹசனுக்கு மட்டும் சென்னையில் வேலைக் கிடைத்திருந்தது.
"கண்டிப்பா வருவேன் மச்சான்..
சரி இந்த புது ஆண்டுல என்னவெல்லாம் சாதிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க? எல்லோரும் அவங்க கருத்தச் சொல்லுங்க" என்றான் ரவி.
"நான் பணம் சேர்ப்பதை பற்றி நிறைய உளவியல் புத்தகங்களை படிச்சிட்டு இருக்கிறேன். இன்னும் இந்த ஆண்டு முழுவதும் படிச்சிட்டு காசு எப்படி சேர்க்கணும் என்பது முழுசா தெரிந்து கொண்டு அதன்படி ஷேர் மார்க்கெட் போன்ற இடங்களில் கால் எடுத்து வைக்கப் போகிறேன்" என்றான் ராஜேஷ்.
"நான் இந்த வருடம் ஜிம்முக்கு போய் உடல் ரீதியாக ஃபிட்டான பிறகு வேலை தேடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன்" என்றான் பீட்டர்.
"நான் சென்னையை விட்டு வெளியே போகிறேன். எங்கு வேண்டுமானாலும் வேலைப் பார்த்து போய் விடுவேன் ஆனால் சென்னையில் மட்டும் இருக்க மாட்டேன்" என்றான் மணி.
"ஏன் சென்னையில் வேலைக் கிடைத்தாலும் செய்ய மாட்டியா? நான் அப்படி இல்லை. எங்கு வேலைக் கிடைத்தாலும் செய்வேன். இந்த ஊரில் கிடைத்தால் அதற்கே முதலிடம் கொடுப்பேன்" என்றான் ரஹீம்.
"இவன் இப்படித்தான் சொல்லுவான், இந்த ஊரை விட்டு போக மாட்டேன், சொந்த பந்தங்களை விட்டு பிரிய மாட்டேன், பிறந்தது பிறருக்கு உதவி செய்வதற்கு தான் என்று பழைய பஞ்சாங்கத்தையே பேசிக்கிட்டு இருப்பான்"என்றான் ராஜேஷ்.
"பாருங்க ஃபிரண்ட்ஸ் இந்த உலகம் காசு இருந்தா தான் மதிப்பாங்க, அதனால காசு தேடி நாம போகணும். சொந்த பந்தங்களை எல்லாம் நாம் பிரியணும். நம்ம சொந்தங்கள்ல நிறைய பேருக்கு நம்ம நல்லா இருப்பது பிடிக்காது" என்றான் மணி.
"எல்லாரும் என்ன கருத்தில் இருக்கீங்களோ அந்த கருத்தில்தான் நானும் இருக்கிறேன் நான் சில காலம் வெளியிலேயே போய் சம்பாதிக்க வேண்டும் நமது சொந்த பந்தங்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும் அவர்கள் முகத்தில் கரியை பூச வேண்டும்" என்றான் ரவி.
உடனே ஹசன், "ரஹீம் உனது கொள்கையெல்லாம் சரிதான் ஒன்று தெரியுமா? இந்த உலகத்தில் பணம் இல்லை என்றால் நம்மை யாரும் மதிக்க மாட்டாங்க. பணத்தை சம்பாதிப்பதை கற்றுக் கொண்டதால் தான் அமெரிக்கர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். பணம் சார்ந்த உளவியல்களை நீயும் கற்றுக் கொள். சொந்தபந்தங்களை நீ உச்சத்திற்கு வரும் வரை தள்ளி வை அதுதான் சரி" என்றான்.
"ஹசன் சொல்வது தான் சரி. நாம் உயரத்திற்கு வரும் பொழுது தான் நம்மை கண்டு நமது சொந்தங்கள் மதிப்பார்கள் காசு இல்லாமல் நாம் ஊருக்குள்ளே சுற்றிக்கொண்டிருந்தால் தெரு நாய் கூட நம்மை மதிக்காது" என்றான் பீட்டர்.
நிமிர்ந்து அமர்ந்து அவர்கள் அனைவரையும் பார்த்தான் ரஹீம். எல்லோரும் தங்கள் உறவுகளை உதாசீனம் படுத்த வேண்டும், பணம் சம்பாதிப்பதை தான் குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்றக் கொள்கையை பார்த்து அவனுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.
"நான் சம்பாதிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. எங்கும் போக மாட்டேன் என்றும் சொல்லவில்லை. நீங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. இன்றைக்கு நாம் நாகரிகத்தின் உச்சத்தில் இருப்பதாக கூறுகிறோம் நாம் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களை எல்லாம் கண்டுபிடித்து தந்தார்களே அவர்கள் எல்லாம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே கற்றுத் தந்திருந்தால்... நமது நிலை என்னவாக இருந்திருக்கும்?"
"என்ன வேலையாக இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் அமர்ந்திருந்தாலும், எத்தனை கோடிகளை அடுக்கி அதன் மீது படுத்திருந்தாலும், பசிக்கும்போது உணவை தானே தேடுகிறோம்? அந்த உணவை தயாரிக்க கூடிய விவசாயி பணம்தான் முக்கியம் என்று நினைத்து விவசாயத்தை விட்டிருந்தால் நமது நிலை என்னவாகும்?"
"நீ கூறுவதெல்லாம் சரிதான் முதலில் சம்பாதிப்போம் பிறகு விவசாயம் பார்ப்போமே" என்றான் பீட்டர்.
"பணம் என்பது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகதான் இருக்க வேண்டுமேத்தவிர முதலாவதாக இருக்கக் கூடாது. விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆறறிவு அந்த அறிவை பணத்துக்காக அடகு வைக்கக் கூடாது. சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை"
"நீ சொல்றது ஒண்ணுமே புரியல எனக்கு" என்றான் மணி.
"நீங்கள் எல்லாம் பணத்தை சம்பாதிப்பதற்காக நிறைய படிக்கிறீர்கள். அது உங்கள் சொந்த பந்தங்களை எல்லாம் உங்களுக்கு எதிரியாக காட்டுகிறது.
வரலாறுகளில் இடம்பெற்ற மனிதர்கள் யாரும் உலக பணக்காரர்கள் இல்லை. மக்களுக்கான தேவைகளை கண்டுபிடித்து புரட்சிகள் செய்தவர்கள் தான்.
சமூகக் கட்டமைப்புகள் தான் நம்மை படிக்க வைக்கிறது, சிறந்த மனிதனாக நம்மை உருவாக்குகிறது.
பிறந்தது முதல் யாரோ ஒருவர் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். நாமும் பிறருக்கு உதவி கொண்டே இருக்க வேண்டும். ஏன்? நாம் இறந்தாலும் கூட நம்மை தூக்கி போவதற்கு நாலு பேர் வேண்டும். ஆனால் மனிதன் அறிவை வளர்த்து சொந்தகாலில் நிற்கும் பொழுது அவ்வளவு பேர்களையும் எதிரியாக பார்ப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை"
"அப்படி என்றால் என்னதான் செய்ய வேண்டும்?" ஹசன்.
"நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சம்பாதிக்கப் போய் வாருங்கள். ஆனால் சொந்த பந்தங்களை உதாசீனப்படுத்தாதீர்கள். சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை அதை இழந்து விடாதீர்கள்.
எத்தனை விதமான தொழிலை செய்தாலும் விவசாயத்தை லாப நஷ்ட கணக்கில் வரும் தொழிலாக மட்டும் கணக்கிட்டு விடாதீர்கள் விவசாயம் ஒரு சமூக சேவை.
தினமும் நாம் தெருவிலே இறங்கி ஓடுகின்றோம். நம் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. ஒரே ஒரு நாள் உங்களுக்காக ஓடுவதை நிறுத்தி பிறருக்காக ஓட வேண்டும் என்று தெருவிலே போய் பாருங்கள். எத்தனை பேர் உங்கள் உதவிக்காக ஏங்கி நிற்கிறார்கள் எத்தனை பேர் பசியும் பட்டினியமாக நம்மோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எத்தனை பேருடைய சிரமங்களும் ஏன் தெருவோரத்தில் இருக்கக்கூடிய பூச்சி புற்பூண்டுகளின் சிரமங்கள் கூட உங்கள் கண்களுக்கு தெரியும்"
"என்னப்பா சொல்ற? என்று பீட்டர் கேட்டான்.
"ஆமாம் நமக்காக மட்டும் ஓடும் பொழுது இவை அத்தனையையும் மறந்து விட்டு, அத்தனையும் உதாசீனம் செய்துவிட்டு, நான் மட்டும் முன்னேற வேண்டும் என்று சுயநலத்தோடு வாழ்ந்து விடுகிறோம். நம்மைப் போல் பிறரும் உயர வேண்டும் என்று நினைக்கும் பொழுது பிறருக்கு உதவ வேண்டிய தருணங்கள் நிறைய நம் கண்களுக்கு தெரியும்.
நீங்கள் எல்லாம் ஓடி உழைத்து பொருளாதாரத்தை ஈட்டி பெறும் கோடீஸ்வரர்களாய் ஆவதை தவறு என்று சொல்லவில்லை. வெறும் கோடீஸ்வரராக ஆவதற்கு சொந்தங்களும், ஊரும், நாம் வளர்ந்த விதங்களும் நமக்கு தடையாக இருக்கும் என்றும், பணம் இல்லாதவர்கள் இவ்வுலகில் வாழ தகுதியற்றவர்கள்! என்று உங்கள் உள்ளத்தில் இருக்கும் அசடுகளை நீக்குங்கள் என்று சொல்கிறேன்"என்று ரஹீம் முடித்தான்.
அப்போதுதான் அவர்களுக்கு விளங்கியது "பணம் சார்ந்த உளவியல்களை கற்றுக் கொண்ட நாம் ஏன் மனம் சார்ந்த உளவியல்களை கற்றுக் கொள்ளவில்லை? வந்திருக்கும் 2025 ஆம் ஆண்டு கண்டிப்பாக மனங்களைப் படிக்க கற்றுக் கொள்வோம் என்று உறுதி கொண்டார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...