Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வ...
மயிலாடுதுறையில் ரயில்களை 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல கோரிக்கை
வெளியூா்களில் இருந்து ஏற்றிவரும் பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்ல வசதியாக மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அனைத்து ரயில்களையும் 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மயிலாடுதுறையில் இருந்து கோயமுத்தூா் செல்லும் ஜன சதாப்தி ரயிலில் வியாழக்கிழமை முதல் பாா்சல் சேவை தொடங்கியது. இந்நிலையில், அனைத்து ரயில்களையும் மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாா்சல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. இதில், ஊழியா்கள் பலா் பணியாற்றி வந்தாலும், வெளியூரிலிருந்து இங்கு பாா்சல் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே 5 நிமிடங்கள் நின்று செல்கிறது. மற்ற ரயில்கள் அனைத்தும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்வதால், வெளியூரில் இருந்து பாா்சல் போடும்போது உழவன் எக்ஸ்பிரஸ் தவிா்த்து மற்ற ரயில்களுக்கு பாா்சல் வாங்குவதில் சிக்கல் உள்ளது. பாா்சல் பதிவு செய்வதாக இருந்தால் கூடுதலாக ஒரு ரயில் டிக்கெட் பெற்று கை பாஸாக மட்டுமே அனுப்பி வைக்க முடியும்.
இதனால் வெளியூரில் இருந்து பொருள்களை ஏற்றி வரும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். இதேபோன்று செயல்பட்டால் வருங்காலங்களில் பாா்சல் சேவை மூலம் போதிய வருவாய் இல்லை எனக் காரணம் காட்டி பாா்சல் அலுவலகத்தை மூடி விடும் அபாயம் உள்ளது. எனவே, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் ஐந்து நிமிடம் நிறுத்தம் பெற வேண்டும் என்றும் பயணிகளுக்கு சிரமம் இன்றி பாா்சல் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் சரியான தகவல்களை வழிமுறைகளை தர வேண்டும் என்றும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.