3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு!
கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
செந்தில் பாலாஜியின் ஆதரவு பெற்ற கரூர் கம்பெனியைச் சேர்ந்த ஆள்கள் தான் இந்த செயலில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பின. செந்தில் பாலாஜிக்கு சிறைக்கு சென்ற பிறகு கரூர் கம்பெனி குறித்த புகார்கள் பெரிய அளவில் எழவில்லை.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் கரூர் கம்பெனி ஆள்கள் மாத மாதம் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று மிரட்டுவதாக புகார் எழுந்தது. கோவையில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தான் கரூர் கம்பெனியின் மூளையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக பார் உரிமையாளர்கள், ஈஸ்வரமூர்த்தியின் அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் பார் உரிமையாளர்கள், ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து கோவை காந்திபுரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் சகுந்தலா, “எங்களுக்கு என்ன ஆனாலும் ஈஸ்வரமூர்த்தி தான் பொறுப்பு.
ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வியாபாரம் செய்கிறோம். மீண்டும் கட்சி பணம் என்று கேட்டால் நாங்கள் எங்கு செல்வோம். பணம் கொடுக்காதவர்களுக்கு காவல்துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுத்து தொழில் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர்.” என்றார்.
இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளர்கள், “அந்த பார் உரிமையாளர் தான் பணம் வாங்கிக் கொண்டு கொடுக்காமல் இருந்தார். அவர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதைக் கேட்டதற்கு ஆள்களை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.” என்றனர்.
இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தியின் ஆதரவாளரான பாலாஜி என்பரின் புகாரில் சாய்பாபா காலனி காவல்துறையினர் பார் உரிமையாளர் கருப்புசாமி, அவரின் மனைவி சகுந்தலா மற்றும் அவருடன் அந்த அலுவலகத்துக்கு சென்று பிரச்னையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.