தில்லி தேர்தல்: ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு.. காங்கிரஸ் வாக்குறுதி!
சென்னை : பாரில் ஆபாச நடனம்; போலீஸாரை தடுத்த நபர்கள் - மூன்று பேர் கைதான பின்னணி!
சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் பாரில் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பெண் காவலருடன் போலீஸ் டீம், சம்பந்தப்பட்ட தனியார் பாருக்குச் சென்றனர். அப்போது அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி பாரில் மது விற்பனை நடந்துக் கொண்டிருந்தது. அதோடு பின்னணி இசைக்கு ஏற்ப மூன்று பெண்கள் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை சிலர் வீசிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் அதை தடுக்க முயன்றனர். அப்போது போலீஸார் உள்ளே நுழைவதை பாரின் உரிமையாளர்கள், ஊழியர்கள் தடுத்தனர். அதையும் மீறி போலீஸார், உள்ளே சென்று அந்த ஆபாச நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதுதொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி பாரை நடத்தியதும், பெண்களை கட்டாயப்படுத்தி பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதும் விசாரணை செய்ய முயன்ற போலீஸாரை தடுத்து மிரட்டியதும் தொடர்பாக பாரின் உரிமையாளர் முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தாணு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வினோத் (39) ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அங்கிருந்து குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளர் வினோத், மீது ஏற்கெனவே ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளன. கடந்த 27.12.2024-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் கிடைத்த ஜாமீனில் வினோத் வெளியில் வந்திருக்கிறார். ஆனால் அடுத்த சில தினங்களில் அதே குற்றச் செயலில் ஈடுபட்டு மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.