மதுரை: டூவீலர் சர்வீஸ்; பணம் கேட்ட மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ! - வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்!
டூ வீலரை சர்வீஸ் செய்ததற்கு பணம் கேட்ட மெக்கானிக்கை எஸ்.ஐ தாக்கிய வீடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூ வீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ-யாக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் பணிபுரிந்த காலத்திலிருந்து சீனிவாசனிடம் தன் டூவீலரை சர்வீஸ் செய்வதும், அதற்கு பணம் கொடுக்காமல் செல்வதுமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் எஸ்.ஐ அண்ணாதுரை, இதுவரை 8600 ரூபாய் பாக்கி வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், சில நாள்களுக்கு முன் தன் டூவீலரை ஆல்டர் செய்து தர வேண்டும் என்று சீனிவாசனிடம் கூற, 'அதற்கு முன்பணமாக 10,000 ரூபாயும், ஏற்கெனவே தர வேண்டிய பாக்கி தொகை 8600 ரூபாயும் கொடுங்கள்' என்று கேட்க, 'முதலில் வேலையைப் பாரு, பின்னால் பார்த்துக்கொள்ளலாம்' என எஸ்.ஐ அண்ணாத்துரை அதிகாரமாக தெரிவித்து சென்றுள்ளார்.
பணம் தராததால் அவருடைய டூ வீலரை பழுது பார்க்காமல் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார் சீனிவாசன். அதுகுறித்து கேட்க சீனிவாசனுக்கு போன் செய்தும் எடுக்காததால் ஆத்திரமடைந்த எஸ்.ஐ அண்ணாத்துரை, கடந்த 4 ஆம் தேதி தன்னுடன் முரளி என்ற கான்ஸ்டபிளையும் அழைத்து வந்து 'வண்டியை சரி பண்ணித் தர முடியாதா?'' என அசிங்கமாக திட்டியபடி சீனிவாசனையும், அங்கிருந்த ஊழியரையும் கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கியுள்ளார். சீனிவாசனை தன் காரில் ஏற்றி கஞ்சா வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாக தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளுடன் மதுரை எஸ்பி, மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பியவர், தன்னை தாக்கிய எஸ் ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை கலெக்டரிடம் புகார் அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசன், "வாடிப்பட்டியில் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் நிலையில் பணம் கொடுக்காமல் டூவீலரை ரிப்பேர் செய்து தர வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்த நிலையில் பணம் இல்லாததால் சர்வீஸ் செய்யாமல் இருந்த என்னையும், ஊழியரையும் எஸ்.ஐ அண்ணாதுரையும் அவருடன் வந்த காவலர் முரளி இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கினார்கள். பின்பு அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்று கஞ்சா வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினார்கள்" என கண்ணீருடன் தெரிவித்தார்.
இப்புகார் தென் மண்டல ஐ.ஜி-யின் கவனத்துக்கு சென்று எஸ்.ஐ அண்ணாதுரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.