3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு!
தில்லி முதல்வருக்கான பங்களா ஒதுக்கீட்டை மத்திய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் இது குறித்து மேலும் அதிஷி பேசியதாவது,
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதேவேளையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு முதல்வர் இல்லத்திலிருந்து என்னை இரண்டாவது முறையாக வெளியேற்றியுள்ளது.
குடியிருப்புகளில் இருந்து அகற்றுவதன் மூலம் எங்கள் பணிகளை முடக்கலாம் என பாஜக நினைக்கிறது. எனது குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகிறது.
வீடுகளை எங்களிடம் இருந்து பறிக்கலாம். ஆனால், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை பறிக்க முடியாது.
மூன்று மாதங்களுக்கு முன்பு என்னுடைய உடமைகளை வீட்டில் இருந்து தூக்கி வீசினர். தற்போது மீண்டும் அதே வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லி மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் எங்கள் இருப்பிடங்களை எடுத்துக்கொண்டாலும் மக்கள் நலனுக்கான எங்கள் சேவைகளை நிறுத்த முடியாது. மக்களுக்கான சேவை குறித்து பாஜகவுக்கு அக்கறை இல்லை.
பள்ளிக் குழந்தைகளுக்காக கல்வி, மக்களுக்கான மின்சார வசதி என எது குறித்தும் பாஜகவுக்கு கவலை இல்லை. அவர்கள் நோக்கமெல்லாம், ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவது மட்டுமே என அதிஷி விமர்சித்தார்.
இதையும் படிக்க | இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்!