தில்லி பேரவைத் தேர்தல்: நடத்தை விதிகள் வெளியீடு!
சட்டபேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிகாரபூர்வ நடத்தை விதிமுறைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்து அமைச்சர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நடத்தை விதிமுறைகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் சாதனைகளை எடுத்துக்காட்டும் விளம்பரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது.
விளம்பர ஒளிபரப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தால் அல்லது அச்சு ஊடகங்களிலோ, மின்னணு ஊடகங்களிலோ வெளியிடப்பட்டிருந்தால், அந்த விளம்பரத்தின் ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
சுவரில் எழுதுதல், சுவரில் சின்னங்கள் குறித்த ஓவியங்கள் வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கட்-அவுட்கள், பதாகைகள் மற்றும் கொடிகள் கட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படாது.
தேர்தல் பிரசாரம் அல்லது தேர்தல் தொடர்பான பயணங்களுக்கு அரசு வாகனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ஆம் தேதியும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜன.17 மற்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜன.18 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பாளர்கள் ஜன.20 ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.